கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!
சுட்டெரிக்கும் ஆந்திர வெயிலில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சினேகாவுக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் களைத்து விழுந்தது குதிரை.
இதனை சினேகாவே சமீபத்தில் கூறினார்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவரும உனக்காக எல்லாம் உனக்காக நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற தனது ரசிகருடன் அவர் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் சினேகா கலந்து கொண்டு தனது ரசிகருடன் பேசினார். விருந்து சாப்பிட்டார்.
அப்போது நடிகைகள் எந்த அளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைக்க தனது சொந்த அனுபவம் ஒன்றை விவரித்தார்.
அவர் கூறுகையில், "ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் சமீபத்தில் ஆந்திராவில் நடந்தது. மிகக் கொடுமையான வெயில். காட்சிப்படி, நானும் ஒரு குதிரையும் ஓட வேண்டும். குதிரைக்கு முன்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் குதிரை துரத்துவது போல காட்சி. டூப் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அந்த வெயிலில், சுடும் மணலில் நான் ஓடினேன். குதிரை எந்த அளவுக்கு வேகமாக ஓடும் என்பது உங்களுக்கே தெரியும். எனவே மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன்.
நீண்ட தூரம் ஓடியபிறகு திரும்பிப் பார்த்தால் குதிரை ஓட முடியாமல் களைத்துப் போய் மணலில் விழுந்து கிடந்தது. உடனே, படக்குழுவினர், 'குதிரையை விட அதிவேகமாக ஓடுகிறார் சினேகா... ஓட்டத்தில் குதிரையே தோற்றுவிட்டது சினேகாவிடம்' என்று பாராட்டினார்கள்.
என்னுடைய வருத்தமெல்லாம், சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு நடிகைகளின் இந்தக் கஷ்டம் தெரிவதே இல்லையே என்பதுதான். ஏதோ நடிகைகள் ஜில்லென்று வருகிறார்கள். குளுகுளு ஏசி கேரவனில் சொகுசாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில், நடிகைகளும் மிகக் கடினமாக உழைத்துதான் இந்த நிலைமைக்கு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், ஏதோ ஏசியில் இருப்பதுபோல குத்துப்பாட்டுக்கு ஆடிக் கொடுக்கிறார்கள்", என்றார்.
சரி... விழுந்த குதிரை பிழைச்சுதா இல்லையா!


Click it and Unblock the Notifications











