குதிரையிலிருந்து விழுந்தார்... சரத்குமாரின் இடுப்பெலும்பு முறிவு!

அவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் ஒரு மாத காலம் வரை ரத்து செய்யப்படுகின்றன.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும், நடிகருமான சரத்குமார் சாரதி என்ற கன்னடமொழி படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு முன் ஸ்னேகாவுடன் இணைந்து செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விடியல் படத்தில் நடித்தார். மதுரையில் தொடங்கி குற்றாலம், தென்காசி பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நேற்றுதான் கன்னடப் படத்தில் நடிக்க வந்தார்.
சாரதி படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. சரத்குமார் குதிரையில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த அடிபட்டது. அவருடைய இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் சரத்குமார் கதறினார்.
உடனடியாக அவரை படப்பிடிப்பு குழுவினர் கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது.
அப்போது அவருக்கு கழுத்து மற்றும் முதுகுதண்டு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கட்டும் போடப்பட்டது. பின்னர் சரத்குமார் ஒரு ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னையில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த விபத்தையொட்டி, 'சாரதி' படப்பிடிப்பு ஒரு மாதம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











