கந்தசாமி படப்பிடிப்பில் பரபரப்பு!

இதனால் படப்பிடிப்பே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. சுமார் ரூ. 40 கோடி செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கின்றனர். திருட்டுப் பயலே படத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தை இயக்குகிறார்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் கந்தசாமி குழு மெக்ஸிகோ செல்லவிருக்கிறது. அதற்கு முன் சென்னையில் எடுக்க வேண்டிய சில காட்சிகளுக்காக திரைப்பட நகரில் கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இன்று காலை 6 மணிக்கு விக்ரம், ஸ்ரேயா, சுசி கணேசன் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் திரைப்பட நகருக்கு வந்தனர்.
அங்குள்ள பெரிய மீன் நுழைவாயிலின் பின்புறம் ஒரு காட்சியைப் படமாக்க முயன்றபோது, அங்கிருந்த வேப்ப மரம் ஒன்றில், குபுகுபுவென பால் கொட்டியது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரேயா, விக்ரம், சுசி கணேசன் மற்றும் குழுவினர் அனைவரும் திரண்டு நின்று அதை வேடிக்கைப் பார்த்தனர்.
இதற்குள் வேப்ப மரத்தில் பால் வடியும் செய்தி பரவ, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அங்கே கூடிவிட்டனர். சில பெண்களுக்கு அம்மன் அருள் வந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.
இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்தது.
மரங்களில் இருந்து பால் போன்ற திரவம் வடிவது இயற்கையான நிகழ்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











