மழையால் 35 சினிமா சூட்டிங்குகள் ரத்து
தமிழகத்தில் பெய்து வரும மிக பலத்த மழையால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வடபழனி, கோடம்பாக்கத்தில் உள்ள பெரும்பாலான ஸ்டூடியோக்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் படப்பிடிப்புகளை நடத்த முடியவில்லை.
மேலும் பல குழுவினரும் வெளியூர் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்திற்காக வடபழனியில் போடப்பட்ட செட்டுகள் சேதமடைந்து விட்டன. இதனால் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.
இன்று நகைக் கடை ஒன்றில் ரஜினி சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சியைப் படமாக்குவதாக இருந்தனர். இதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு அனைவரும் வந்திருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் தொடர் மழை காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் போய் விட்டது.
சிம்பு நடிக்கும் சிலம்பாட்டம் படத்தின் பாடல் காட்சியொன்று போரூர் டி.ஆர்.கார்டனில் படமாக்கப்பட இருந்தது. கன மழையால் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
மீரா ஜாஸ்மின், கஜன் நடிக்க வெற்றிவேல் இயக்கும் ஆதிநாராயணா படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. மழையால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.
சுனேனா-நகுலன் மீண்டும் இணையம் மாசிலாமணி படத்தின் சூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
குஞ்சுமோன் தயாரிப்பில் பாலாஜி இயக்கும் காதலுக்கு மரணமில்லை படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வந்தது. மழையால் நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இதையடுத்து இந்தக் குழுவினர் சென்னை திரும்புகிறார்கள்.
செழியன் இயக்கும் ஓடும் மேகங்களே படத்துக்கு ஒரு பாடல் காட்சி கிண்டியில் படமாக்க ஏற்பாடுகள் நடந்தன. இதில் ஆட மும்பையிலிருந்து ஒரு மாடலும் வரவழைக்கப்பட்டார். ஆனால், மழையால் சூட்டிங் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
சத்யராஜ் நடிக்கும் சங்க மித்ரா படப்பிடிப்பு திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது. மழையால் அக் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர்.
அதே போல லாரன்ஸ் நடிக்கும் ராஜாதி ராஜா படப்பிடிப்புக்காக படக் குழுவினர் குற்றாலம் செல்ல இருந்தனர். கிட்டத்தட்ட 35 படங்களின் சூட்டிங்குகள் ரத்தாகிவிட்டதாக கோடம்பாக்கம் தகவல் தெரிவிக்கிறது.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் டிவி தொடர்களின் படப்பிடிப்புகளும் கூட ரத்தாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











