நீலகிரியில் படப்பிடிப்பு-டைரக்டர் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 'ஏன் இப்படி மயக்கினாய்' என்ற சினிமா படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
கோவைதம்பி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை கிருஷ்ணா டைரக்ட் செய்கிறார். ரிஷி, வைணவி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் பிரமிட் சாய்மீரா பிரபல தயாரிப்பாளர்களை வைத்து தயாரிக்கும் 10 படங்களில் ஒன்று.
முதலில் இதில் கீரத் நடிப்பதாக இருந்தது. அவரைத் தூக்கிவிட்டு மும்பையைச் சேர்ந்த புதுமுகமான வைணவியைப் போட்டுள்ளனர்.
இந்த ரிஷி, அஜீத்தின் மனைவி ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் தான். இதில் ரிஷியாக அவதாரம். படப்பிடிப்பு பெங்களூர் பிரேசர் டவுனி்ல் பலத்த பாதுகாப்புக்கு இடையே தொடங்கி இப்போது நீலகிரிக்கு இடம் பெயர்ந்துள்ளது யூனிட்.
இந் நிலையில் டைரக்டர் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கண்ணைக் கவரும் அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதிகள் பல உள்ளன. ஆனால் அங்கு சென்று படம் எடுக்க முடியவில்லை.
காரணம், அந்த பகுதிகள் வனப்பகுதிகளுக்கு சொந்தம் எனக் கூறி படபிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் வளர்ச்சியை தமிழக முதல்வர் கருத்தில் கொண்டு தமிழ் திரைப்படங்கள் சூட்டிங் நடத்த சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.
அரசு இந்த கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கினால் சிறிய அளவிலான பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வெளிவரும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











