1000 பரளை மாடுகளுக்கு மத்தியில் பாலா ஷூட்டிங்: அவன் இவன் ஸ்பெஷல்

இந்த இருவரும் குறைந்த பட்சம் ஒரு செய்தியைக் கூட தாங்களாக எந்த நிருபருக்கும் கொடுத்ததில்லை. ஆனால் தோண்டித் துருவி விஷயத்தை செய்தியாக்கிவிடுவார்கள் செய்தியாளர்கள் (இதை காப்பி - பேஸ்ட் பண்ண ஒரு கூட்டமே காத்திருக்கிறது!).
பாலா இப்போது இயக்கி வரும் அவன் இவன் படம் 6 மாதங்களில் முடிக்கப்பட்டு 2010லேயே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் முடியவில்லை. இன்னும் படப்பிடிப்பு தொடர்கிறது. அதே நேரம் வழக்கமான பாலா பட வேகத்தைக் காட்டிலும் இந்தப் படம் சீக்கிரம் முடியும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டனர்.
படத்தின் முக்கிய காட்சி ஒன்று சமீபத்தில் தேனியில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிக்கு ஆயிரம் மாடுகள் தேவைப்பட்டனவாம். இவை கூட்டம் கூட்டமாகத் திரியும் பரளை மாடுகள். காடு கரம்புகளில் மேய்வதில் மட்டுமல்ல, தனியாக மாட்டும் ஆளைத் துரத்துவதிலும் கூட்டமாகவே காணப்படும் இவை. ரொம்ப ஆபத்தான மாடுகள்.
இந்த மாடுகளுக்கு மத்தியில் படத்தின் முக்கிய கேரக்டர்கள் மூன்று கடுமையாக சண்டையிடுவது போல காட்சி. இதற்காக ஆயிரம் பரளை மாடுகளை ஏற்பாடு செய்துள்ளனர் படப்பிடிப்புக் குழுவினர். ஆனால் எதிர்பாராத விதமாக அவற்றில் பாதி தறிகெட்டு ஓடிவிட, மேலும் 500 மாடுகளை உள்ளூரில் ஏற்பாடு செய்து கொடுத்தார்களாம்.
இதில் விசேஷம் என்னவென்றால், இந்த ஏற்பாடுகளில் பாலாவை விட தீவிரம் காட்டியது தயாரிப்புத் தரப்புதானாம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை நேர்த்தி என்பதால், பாலா எள் என்றால் இவர்கள் எண்ணெயாக நிற்கிறார்களாம்!


Click it and Unblock the Notifications











