சூரிக்கு கேக் ஊட்டிவிட்ட சூர்யா.. எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரியின் கதாபாத்திரப் பெயர் இதுதானா?
சென்னை: நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்தநாள் நேற்று சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நடிகர் சூர்யா சூரிக்கு கேக் ஊட்டி விடும் போட்டோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூரியின் பெயர் என்ன என்பதையும் இயக்குநர் தனது ட்வீட் மூலம் அறிவித்துள்ளார்.

சூரி பிறந்தநாள்
1977ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி மதுரையில் பிறந்த நடிகர் சூரி தனது 44வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் சூரிக்கு ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 1995ம் ஆண்டு சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்த சூரி நடிகர் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தில் டான்சராக அன்கிரெடிட்டட் ரோலில் நடித்திருப்பார்.

அண்ணாத்த
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி என பல டாப் ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார்.

வெற்றிமாறன் படத்தில் நாயகன்
அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பரோட்டோ சூரியாக காமெடி நடிகராக உயர்ந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சூரிக்கு துணையாக விஜய்சேதுபதியும் அந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் வாழ்த்து
அண்ணன் பார்க்க ஆள் சூப்பராகிட்டாரு இனிமே நடிச்சா ஹீரோதான்னு சொல்லுவாரு.. நாம நம்ம சங்கத்துக்கு வேறு ஆள பார்க்க வேண்டி தான் என தனது நகைச்சுவை ஸ்டைலில் நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்.

கேக் கட்டிங்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் சூரி நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பில் நேற்று கோலாகலமாக அத்தனை நடிகர்களும் ஒன்று திரண்டு பெரிய கேக் வாங்கி நடிகர் சூரியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

ஊட்டிவிட்ட சூர்யா
இயக்குநர் பாண்டிராஜன், சத்யராஜ், நாயகி பிரியங்கா அருள் மோகன், குக் வித் கோமாளி பிரபலம் புகழ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, பழைய ஜோக் தங்கதுரை என ஒரு பெரிய பட்டாளமே இந்த கேக் கட்டிங்கில் கலந்து கொள்ள நடிகர் சூர்யா சூரிக்கு கேக் ஊட்டிவிட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சூர்யா தரிசனம்
நடிகர் சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா கொடுத்த தரிசனத்தை பார்த்த அவரது ரசிகர்கள் தனியாக சூர்யாவின் போட்டோவை மட்டும் கட் செய்து அதனை வைரலாக்கி வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கலுக்கு வருமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

கதாபாத்திர பெயர்
இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரியின் பிறந்தநாள் கேக் கட்டிங் புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு " இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அவனி சூளாமணி" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் சூரி இந்த படத்தில் அவனி சூளாமணி எனும் கதாபாத்திர பெயரில் நடித்து வருகிறார் என்பது தெளிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











