ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பட ஷூட்டிங்.. பொதுமக்களை தடுத்து அடாவடி செய்த பவுன்சர்கள்!
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் ஷூட்டிங்கின் போது, பொதுமக்களை தடுத்து பவுன்சர்கள் அடாவடியில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க உள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
த்ரி, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு லால் சலாம் படத்தை இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள, இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு அண்மையில் பூஜை போடப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம்
இதில் நேற்று திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இரண்டு நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதால், படக்குழுவினர் அனைவரும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். லால் சலாம் படப்பிடிப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதை தெரிந்து கொண்ட பொதுமக்கள் அங்கு வேடிக்கை பார்க்க கூடினர். இதையடுத்து பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

படப்பிடிப்பில் சலசலப்பு
படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஷூட்டிங்கை செல்போனில் படம்பிடித்தனர். இதையடுத்து,அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களின் செல்போனை பிடுங்கி வீடியோவை டெலிட் செய்தனர்.

பவுன்சர்கள் அடாவடி
இதனால், பவுன்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், படப்பிடிப்பை வீடியோ எடுத்தால், செல்போனை பறிமுதல் செய்துவிடுவோம் என்று படக்குழு எச்சரித்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பொது இடத்தில் படப்பிடிப்பை நடத்தினால் அப்படித்தான் செல்போனில் படம் எடுப்போம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Click it and Unblock the Notifications











