பளார் விட்ட இயக்குநர்... கதறிய நடிகை... கொதிக்கும் மகளிர்!

'பூமணி', 'பூந்தோட்டம்' போன்ற படங்களை இயக்கியவர் இந்த களஞ்சியம். இப்போது 'கருங்காலி' என்ற படத்தை இயக்கி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். சீனிவாசன் என்பவர் ஹீரோவாம். அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா ஆகிய 3 ஹீரோயின்கள் இந்தப் படத்தில்.
இதில் புது முக நடிகை அஸ்மிதா, படப்பிடிப்பில் சரியாக உணர்ச்சியைக் காட்டவில்லை என்று கன்னத்தில் பளார் விட்டாராம் களஞ்சியம்.
அதிர்ச்சியடைந்த அஸ்மிதா, ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து கதறிக் கதறி அழுதாராம்.
இதற்காக ஒரு பிரஸ்மீட் வைத்த களஞ்சியம், அஸ்மிதாவைக் காட்டி, "படம் நன்றாக வரவேண்டுமே, அந்த கேரக்டர் கெட்டுவிடக் கூடாதே என்ற வேகத்தில் சைக்கோ போல நடந்து கொள்ள வேண்டிய சூழல். அஸ்மிதாவை கன்னத்தில் அடித்து, திட்டியதெல்லாம் உண்மைதான். ஆனால் அது அவரது நல்லதுக்குதான்", என்று பில்டப் கொடுத்தார் பாரதிராஜா ரேஞ்சுக்கு.
இது குறித்து அஸ்மிதா கூறுகையில், "முதலில் சிரிப்பு.. அடுத்த ஷாட்டிலேயே அழுகை என மாற்றி மாற்றி நடிக்கச் சொன்னார். என்னால் முடியவில்லை. உடனே கத்தியபடி கன்னத்தில் அறைந்துவிட்டார். எனக்கு அவமானம் தாங்கவில்லை. தேம்பித் தேம்பி அழுதேன். ஆனால் கொஞ்சநேரத்தில் அதை மறந்து விட்டேன்.
இப்போது அதை வைத்து பரபரப்பு கிளப்புகிறார்கள்," என்றார்.
ஆனால் பரபரப்பு கிளப்புபவர்கள் பத்திரிகையாளர்கள் அல்ல. மகளிர் அமைப்புகள். அதெப்படி ஒரு பெண்ணை சம்பந்தமில்லாத ஒரு ஆண் கைநீட்டி அறையலாம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்ற கோஷத்துடன் கிளம்பியுள்ளனர்.
பொதுமக்கள் பணத்தை மோசடி செய்ததாக திருவண்ணாமலை போலீசார் ஏற்கெனவே களஞ்சியம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் இருக்கும் களஞ்சியத்துக்கு, இன்னொரு வழக்கைச் சந்திக்க வேண்டிய நெருக்கடி!
ஏற்கெனவே பத்மப்ரியாவை அறைந்த விவகாரத்தில் இயக்குநர் சாமி பட்ட பாடு நினைவிருக்கலாம்!


Click it and Unblock the Notifications











