ஜீவா படத்தை மனைவி இயக்குகிறார்
ஜீவா கடைசியாக இயக்கி வந்த தாம் தூம் படத்தின் மீதக் காட்சிகளை அவரது மனைவி அனீஸ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, கங்கனா ரணவத் நடிக்க ரஷ்யாவில் படமாகி வந்தது தாம் தூம். மறைந்த ஜீவா இதை இயக்கி வந்தார். படத்தின் 70 சதவீத காட்சிகள் முடிவடைந்திருந்த நிலையில் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் மரணமடைந்தார் ஜீவா.இதனால் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தாம் தூம் படமும் முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் மீதமுள்ள படத்தை ஜீவாவின் குருவும், கேமராமேனுமான பி.சி.ஸ்ரீராம் இயக்குவார் என முதலில் கூறப்பட்டது.
தற்போது அதுவும் இல்லை என்றாகி, ஜீவாவின் மனைவி அனீஸே இயக்குவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் படத்தை முடித்துக் கொடுப்பதாக அனீஸ் கூறியுள்ளாராம்.
ஏற்கனவே அனீஸ், பி.சி.ஸ்ரீராமிடம் கேமரா உதவியாளராக பணியாற்றியுள்ளார். பிறகு ஜீவா படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றி வந்தார்.
படத்தின் கேமராமேனாக ஏற்கனவே இருந்து வரும் ஸ்ரீராமே நீடிப்பார். அனீஸுக்கு இயக்கத்தில் அவர் உதவி செய்வார்.
இதற்கிடையே, தாம் தூம் படத்தை சி டிவி நிறுவனத்திடமிருந்து லண்டனைச் சேர்ந்த அய்ங்கரண் திரைப்பட விநியோக நிறுவனம் வாங்கி விட்டதாம்.
எல்லாம் சரியாகி விட்டதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி தீபாவளிக்கு தாம் தூம் ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











