»   »  பாலாவிடம் 'நடி'பட்ட நீத்து!

பாலாவிடம் 'நடி'பட்ட நீத்து!

Subscribe to Oneindia Tamil


நான் கடவுள் நாயகிக்காக மறுபடியும் ஒரு வேட்டையில் இறங்கியுள்ளார் பாலா. லேட்டஸ்டாக இந்தி நடிகை நீத்து சந்திராவை வரவழைத்துப் பார்த்து திருப்தி வராமல் திருப்பி அனுப்பி விட்டாராம் பாலா.


நான் கடவுள் தொடங்கியது முதலே பல்வேறு குழப்பங்கள். முதலில் அஜீத் நாயகனாக அறிவிக்கப்பட்டார். பின்னர் குழப்பங்கள் நடந்து, அஜீத் தூக்கப்பட்டு, ஆர்யா நாயகனாக்கப்பட்டார்.

பிறகு படப்பிடிப்பு ஒரு வழியாக தொடங்கியது. ஆனால் மறுபடியும் புதுக் குழப்பம் வந்தது. அதாவது நாயகி விஷயத்தில் பாலாவுக்கு பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

முதலில் நாயகியாக ஒப்பந்தமானவர் பாவனா. ஆனால் முதல் ஷெட்யூலோடு அவரை அனுப்பி விட்டார் பாலா. இதையடுத்து மலையாள நடிகை பார்வதியை வரவழைத்து டெஸ்ட் செய்து பார்த்தார். அவர் மீதும் திருப்தி வரவில்லை. இதையடுத்து அவரையும் அனுப்பி விட்டார்.

அடுத்து பாலாவிடம் போனவர் கார்த்திகா. இவரை பெரியகுளம் தெருக்களில் பிச்சை எடுக்க வைத்து நடிக்க விட்டார். அவரது நடிப்பைப் பார்த்து சந்தோஷமாகி, சபாஷ், சரியான பிச்சைக்காரி என்று பாராட்டவும் செய்தார்.

ஆனால் எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தபோது, கார்த்திகாவின் நடிப்பில் பாலாவுக்கு திருப்தி வரவில்லை. இதனால் கார்த்திகாவை ரிஜக்ட் செய்து விட்டார்.

கார்த்திகாவும் இல்லை என்றாகி விட்டதால், அடுத்து யாரைப் போடலாம் என்று பாலா சிந்தித்துக் கொண்டிருந்தபோது நீத்து சந்திராவின் பெயரை அவருக்கு சிலர் பரிந்துரைத்துள்ளனர்.

நீத்து பாலிவுட் நடிகை. பிரியதர்ஷனின் கரம் மசாலா படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மதூர் பண்டர்கரின் டிராபிக் சிக்னல் என்ற படத்தில் பிச்சைக்காரி வேடத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான கோதாவரி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

டிராபிக் சிக்னலில் இவர் பிச்சைக்காரி வேடத்தில் நடித்திருந்ததால்தான் இவரை பாலாவிடம் பரிந்துரைத்துள்ளனராம். இதையடுத்து நீத்துவை வரவழைக்க ஏற்பாடு செய்தார் பாலா.

நீத்துவும் அடித்துப் பிடித்துக் கொண்டு மும்பையிலிருந்து மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் தேனிக்குப் போய் பாலாவைப் பார்த்தார். ஆனால் நீத்துவைப் பார்த்த உடனேயே அவரைப் பிடிக்காமல் போய் விட்டதாம் பாலாவுக்கு.

ஸாரி, நீங்க நான் எதிர்பார்த்த பிச்சைக்காரி இல்லை என்று கூறி நீத்துவை அனுப்பி வைத்து விட்டாராம். நீத்துவின் முகம் அச்சு அசல் வடக்கத்திய முகமாக இருந்ததால்தான் பாலாவுக்குப் பிடிக்காமல் போய் விட்டதாம்.

இந்த நிலையில், பூஜாவை டெஸ்ட் செய்து பார்க்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலா. இதற்காக அவரை டெஸ்ட் ஷூட்டிங்குக்கு வருமாறு அழைத்துள்ளராம். பூஜா தரப்பிலிருந்து இதுவரை பதில் போகவில்லையாம். ஆனாலும் அவர் போகக் கூடும் என்கிறார்கள்.

பாலாவின் படத்தை விட அவரது நாயகி வேட்டை படு சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கே!

Read more about: neethu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil