திருப்பூரில் போக்குவரத்தை சீர்குலைத்து ஷூட்டிங்-மக்களை விரட்டியடித்த சினிமாக்காரர்கள்!

ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடிக்கும் படம் பாகன். அஸ்லம் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குநர் அமீரின் உதவியாளர். இதன் படப்பிடிப்பை திருப்பூரில் வைத்தனர். இதையடுத்து நகரின் முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பு நடத்தினர். இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் படப்பிடிப்புக்கு பொதுமக்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்று கூறி அந்தப் பக்கமாக வந்தவர்களையெல்லாம் விரட்டியடித்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். வாகனங்களில் யாரும் அந்த வழியாக போக முடியாத நிலை ஏற்பட்டது.
சில நாட்கள் ஷூட்டிங் என்று கூறி விட்டு கடந்த ஒரு மாதமாக இப்படி பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடும் கொதிப்புள்ளாகியுள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பிலும் சரி, மாநகராட்சி தரப்பிலும் சரி யாரும் வாயே திறக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார்களாம்.
கருணாநிதி காலத்தில்தான் இப்படி பொதுமக்களை பாதிக்கும் வகையில் சினிமாக்காரர்கள் படப்பிடிப்பு என்ற பெயரில் அட்டகாசம் செய்தனர், ஜெயலலிதா ஆட்சியிலும் இப்படியா என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.


Click it and Unblock the Notifications











