சாமி 'அடி' - பத்மப்ரியா ஓட்டம்!

By Staff


மதுரை அருகே நடந்த மிருகம் படப்பிடிப்பின்போது சரியாக நடிக்காத நடிகை பத்மப்ரியாவை இயக்குநர் சாமி கன்னத்தில் பளார் என அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மப்ரியா படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்து வெளியேறி ஆட்டோவைப் பிடித்து விமான நிலையத்திற்கு விரைந்து, விமானம் ஏறி சென்னைக்கு ஓடினார்.

Click here for more images

உயிர் என்ற சர்ச்சைப் படத்தைக் கொடுத்தவர் சாமி. கொழுந்தன் மீது மோகம் கொள்ளும் நாயகி வேடத்தில் சங்கீதா நடித்து பரபரப்பை ஏற்படுத்திய படம் உயிர்.

படத்தின் நாயகனான ஸ்ரீகாந்த்தை விட சங்கீதாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பட விளம்பரங்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தப் படத்தின் கதையை நடிகர் வடிவேலு பொது மேடையில் படு காட்டமாக விமர்சித்துப் பேசியிருந்தார். பதிலுககு சாமியும் பதிலடி கொடுத்தார். பல்வேறு சர்ச்சைகளை உயிர் சந்தித்தாலும் கூட வெற்றிப் படமானது, வசூலையும் வாரியது.

இப்படத்தால் சங்கீதாவுக்கு புத்துயிர் கிடைத்தது, சாமிக்கும் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது சாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மிருகம். ஆதி என்ற புதுமுகம்தான் நாயகன். நாயகியாக நடிப்பவர் பத்மப்ரியா.

படம் ஆரம்பத்ததில் இருந்தே பல பிரச்சினைகள், சர்ச்சைகள். ஷூட்டிங்குக்கு பத்மப்ரியா சரியாக வருவதில்லை, சரியாக நடிப்பதில்லை, கால்ஷீட் சொதப்புகிறார் என்று சாமி தரப்பிலிருந்து சரமாரியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒருமுறை சாமி கொடுத்த டிரஸ்ஸைத் தூக்கிப் போட்ட பத்மப்ரியா, இப்படியெல்லாம் போட்டுக் கொண்டு நடிக்க முடியாது, இது ஆபாசமாக இருக்கிறது என்று கூறி படப்பிடிப்புத் தளத்திலிருந்து கிளம்பிப் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பத்மப்ரியா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பம் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இடையில் சாமிக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க வேண்டியதாயிற்று. எல்லாம் பத்மப்ரியா கொடுத்து வரும் தொடர் இம்சைகளே காரணம் என அவரது உதவியாளர்கள் புலம்பினர்.

இப்படியாக பல்வேறு இம்சைகளுடன் மிருகம் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது மதுரையில் முகாமிட்டுள்ள சாமி, மிருகம் படத்தின் இறுதிக் கட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்.

வெள்ளிக்கிழமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, மதுரை விமான நிலையம் அருகே உள்ள குரண்டி என்ற கிராமத்தில் படமாக்கினார் சாமி. காட்சிப்படி நாயகன் ஆதி இறந்து விடுகிறார். அவரது உடலில் விழுந்து கதறி அழ வேண்டும் நாயகி.

இந்தக் காட்சியை படமாக்கியபோது, பத்மப்ரியா ஒப்பாரி வைத்து அழாமல் ஒப்புக்கு அழுதுள்ளார். பல டேக்குகள் வாங்கியும் கூட பத்மப்பிரியாவுக்கு அழுகை சரியாக வரவில்லையாம். இதனால் டென்ஷனாக இருந்துள்ளார் சாமி.

இந்த நிலையில் எனக்கு 6 மணிக்கு விமானம், அதற்குள் படப்பிடிப்பை முடித்து விடுங்கள் என்று அணத்த ஆரம்பித்துள்ளார் பத்மப்ரியா. காட்சி சரியாக வரவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கிளம்புவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கோபமாக கேட்டாராம் சாமி.

மேலும், ஒழுங்காக அழக் கூடத் தெரியவில்லை உங்களுக்கு, என்ன நடிகை நீங்கள். உங்களால் இன்றைய மொத்த ஷூட்டிங்குமே வேஸ்ட் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் பத்மப்ரியாவுக்கு கோபம் வந்து விட்டதாம். எவ்வளவு தைரியம் இருந்தால் இத்தனை பேர் முன்னிலையில் என்னைத் திட்டுவீர்கள் என்று ஆவேசமாக கேட்டுள்ளார்.

இதைக் கேட்டதும் காலையிலிருந்து டென்ஷனாக இருந்த சாமிக்கு வந்ததே கோபம். அத்தனை கோபத்தையும் கையில் இறக்கி பத்மப்ரியா கன்னத்தில் பளார் என அடித்து விட்டாராம்.

அந்த அடியை எதிர்பாராத பத்மப்ரியா சட்டென கண்ணீர் விட்டு அழுது விட்டார். இதையடுத்து அந்தக் காட்சியை அப்படியே படமாக்குங்கள் என்று கேமராமேனுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், காட்சி தத்ரூபமாக இருக்கிறது, வசனத்தைப் பேசுங்கள் என்றும் பத்மப்ரியாவை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அடி வாங்கிய அதிர்ச்சியில் இருந்த பத்மப்ரியா வசனம் பேச மறுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டாராம். மேலும் தனது மேலாளர் மனோஜைத் தொடர்பு கொண்டு சாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்குமாறும் கூறியுள்ளார். அதன்படியே மனோஜ் நடிகர் சங்கத்தில் நேற்று இரவு புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த பத்மப்ரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர்களிடம் பத்மப்ரியா பேசுகையில், மிருகம் படத்தின் இயக்குநர் சாமி படு மோசமாக நடந்து கொண்டார்.

எனக்கும் பாலியல் ரீதியாகவும் தொந்தரவுகள் கொடுத்தார். என்னால் நிம்மதியாகவே நடிக்க முடியவில்லை. இதற்கு உச்சகட்டமாக பலர் முன்னிலையில் என்னை கன்னத்திலும் அடித்துள்ளார்.

ஒரு சைக்கோ போல அவர் நடந்து கொள்வார். ஷூட்டிங் முடிந்த பிறகும் கூட எனக்குத் தொந்தரவுகள் கொடுத்தார். தவறாக நடக்க முயன்றார் என்றார்.

சாமி என்ன மாதிரியான தொல்லைகள் கொடுத்தார் என்று கேட்டபோது அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டார் பத்மப்ரியா.

தொடர்ந்து அவர் கூறுகையில், சம்பவம் நடந்த நாளில் படப்பிடிப்பு முடிந்த போது அனைவரையும் போகுமாறு கூறிய சாமி என்னை மட்டும் இருக்குமாறும், சில காட்சிகள் இருப்பதாகவும் அதை முடித்து விட்டுப் போகலாம் என்றும் கூறினார்.

ஆனால் அவரது உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட நான் அதுகுறித்து கேட்டபோது, அவர் என்னை அடித்து விட்டார். இதுதான் நடந்தது.

தென்னிந்திய மொழிகளில் நான் 20 படங்களில் நடித்துள்ளேன். 13 விருதுகளை வாங்கியுள்ளேன். யாருமே என்னை இதுவரை விமர்சித்ததில்லை.

இதுகுறித்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி ஆகியவற்றில் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு நியாயம் கிடைக்க வழி செய்வார்கள் என நம்புகிறேன் என்றார்.

சாமி மறுப்பு:

பத்மப்ரியா விவகாரம் குறித்து சாமியிடம் கேட்டபோது, இப்படி ஒரு மோசமான நடிகையை நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு முரட்டுத்தனமான, பிடிவாதமான பெண் பத்மப்ரியா. பத்மப்ரியா ஒரு சைக்கோ. படப்பிடிப்பின்போது அப்படித்தான் நடந்து கொள்வார்.

இவர் மாதிரி ஒரு நடிகை இருந்தால் தமிழ் சினிமாவே அழிந்து நாசமாகிப் போய் விடும். படப்பிடிப்புத் தளத்தில் அவர் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. சொல்வதைக் கேட்பதே இல்லை.

இப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ. 13 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளோம். ஆனால் அவர் படப்பிடிப்புக்கு முறையாக வரவே இல்லை. படத்தை முடிக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் மேலும் ரூ. 75 ஆயிரம் பணத்தையும் கொடுத்தோம்.

ஆனால் இப்போது படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டார். இந்த விவகாரம் தொடர்பாக என்ன நடந்தாலும் சரி அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் பாக்கி உள்ளன. அதில் நடிக்க வைக்காமல் அவரை நான் விட மாட்டேன் என்றார் சாமி.

பத்மப்ரியா சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. ஏற்கனவே மலையாள டப்பிங் கலைஞர்கள் குறித்து அவர் விமர்சித்துப் பேசியதால் மலையாள டப்பிங் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. பத்மப்ரியாவுக்கு டப்பிங் பேச மாட்டோம் எனவும் அதிரடியாக அறிவித்தனர். இதையடுத்து பத்மப்ரியா மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

இப்போது மிருகம் படத்தின் மூலம் மறுபடியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பத்மப்ரியா.

More from Filmibeat

Read more about: padmapriya samy uyir
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X