நடுநிசியில் விரட்டிய பிளாட்பாரவாசிகள்... பன்றிக்கு நன்றி சொல்லி ஹீரோவின் வித்தியாச அனுபவம்
சென்னை : நடிகர் நிஷாந்த் ரூஸோ லீட் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் பன்றிக்கு நன்றி சொல்லி.
வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கிய இந்தப் படத்தின் இந்த தலைப்பிற்காகவே ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா படத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பின்போது தான் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் நிஷாந்த் ரூஸோ.

பன்றிக்கு நன்றி சொல்லி படம்
பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம் சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நிஷாந்த் ரூஸோ நாயகனாக நடித்திருந்தார்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியீடு
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற நிஷாந்த் ரூஸோ முன்னதாக ஆண்டனி என்ற படத்தில் லாலுக்கு மகனாக நடித்திருந்தார்.

இயக்குநர் பாலா அரன்
அந்தப் படத்தின் இடையிலேயே பன்றிக்கு நன்றி சொல்லி படத்திற்காக பாலா அரனிடமிருந்து அழைப்பு கிடைக்க அதை பச்சக்கென்று பிடித்துக் கொண்டார் ரூஸோ. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துவரும் ஆதரவு அவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுவாரஸ்ய சம்பவம்
இந்தப் படத்தின் பல காட்சிகளை யாரும் அறியாதவண்ணம் படமாக்கப்பட்டதாகவும் கோவையில் நள்ளிரவில் பிக்பாக்கெட் திருட்டு ஒன்றை படமாக்கியபோது, வழியில் தங்களை நிறுத்திய போலீசார், நிஜ திருடர்கள் என்று எண்ணி தங்களை ஜீப்பில் ஏற்றும் அளவிற்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரத்திய பிளாட்பாரவாசிகள்
இதேபோல சைதாப்பேட்டையில் சாலையில் ஓடும் காட்சி படமாக்கப்பட்டபோது, அங்கிருந்த பிளாட்பாரவாசிகள் தங்களை விரட்ட ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார். இதுபோன்ற பல சுவாரஸ்யங்கள் படப்பிடிப்பின்போது நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரூஸோ மகிழ்ச்சி
இந்தப் படத்தின் தலைப்பு வேறு மாதிரியாக இருப்பதை பலர் சுட்டிக் காட்டிய நிலையில், இந்த டைட்டிலுக்காகவே ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா படத்தை பார்த்து, தொடர்ந்து படத்தை வெளியிடவும் முன்வந்ததாகவும் ரூஸோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
தற்போது சர்வைவல் ஆக்ஷன் த்ரில்லர் படம் ஒன்றில் தான் நடித்து வருவதாகவும், அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் ஜானரில் யார்க்கர் என்ற படத்திலும் நடித்து வருவதாகவும் ரூஸோ குறிப்பிட்டுள்ளார். பன்றிக்கு நன்றி சொல்லி படம் தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











