டகால்டியில் டபுள் ஆக்ட் காட்டும் சந்தானம்... சூட்டிங் முடிஞ்சு போச்சு - ரிலீஸ் எப்போ?
சென்னை: டகால்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டதை அடுத்து நடிகர் சந்தானம் அந்த படப்பிடிப்பு குழுவினருடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்து அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ஆனால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பதுதான் தெரியவில்லை.
டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சந்தானம், தன்னுடைய காமெடி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார் என்று சொல்லலாம். இவர் நாயகனாக நடித்து வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படம் அபார வெற்றி பெற்று வசூலும் எதிர்பார்த்த மாதிரியே இருந்தது.

இதனையடுத்து தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தை தயாரித்து நடித்து வெளியிட்டார். ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் சந்தானம் சோர்ந்து போகாமல், நடித்தால் ஹீரோவாதான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சந்தானம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் ஜான்சனின் ஏ 1 திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், வர்த்தக ரீதியாக வெற்றி வெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.
அடுத்ததாக, நடிகர் சந்தனம் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியது. இயக்குநர் கண்ணனின் முந்தைய படைப்புகளான பூமராங் மற்றும் இவன் தந்திரன் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் இரு வேடங்களில் டகால்டி என்ற படத்தில் நடித்தார். சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடித்துள்ளார். இதில் யோகி பாபுவும் இணைந்துள்ளார். ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து டகால்டி படக்குழுவினருடன் சந்தானம் சேர்ந்து எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை தன்னுடைய தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 'டகால்டி' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு இடையில் நடிகர் சந்தானம் இயக்குனர் ஆனந்த் பல்கி இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம் ரிலீசிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











