'சிங்கக்குட்டி'யுடன் மோதிய மீனவர்கள்!

அதிரடி இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் சிவாஜி கணேசனின் பேரனும், ஸ்ரீபிரியாவின் அக்காள் மகனுமான ஜூனியர் சிவாஜி, கெளரி முன்ஜால் ஜோடியாக நடிக்க சிங்கக்குட்டி என்ற படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தனது நண்பர்களுடன் கடற்கரையில் உள்ள ஒரு படகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மீனவர்கள் சிலர் இது எங்கள் படகு, இதில் நீங்கள் எப்படி அமரலாம், ஷூட்டிங் நடத்த யாரை கேட்டீர்கள் என்று கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைக் கேட்ட ராஜசேகருக்கு கோபம் வந்தது. முறையான அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு நடத்துகிறோம். எதுக்கு உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீனவர்களால் ஏதாவது களேபரம் ஆகிவிடுமோ என படக் குழுவினர் பயந்தனர். அதற்குள் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்ததை பார்த்த மீனவர்கள் அங்கிருந்து அகன்று விட்டனர்.
அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பணம் பறிப்பதற்காக இப்படி தகராறு செய்வார்களாம். ஆனால் ராஜசேகர் தைரியமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் மீனவர்கள் தப்பி ஓடிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் 1 மணி நேரம் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











