படக்குழுவினர் 2 பேர் இடையே மோதல், கத்திக்குத்து: ஷூட்டிங்ஸ்பாட்டில் பரபரப்பு
லண்டன்: விட்சஸ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த பிரச்சனையில் படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
ராபர்ட் ஜெமெகிஸ் இயக்கத்தில் ஆன் ஹாதவே, அக்டேவியா ஸ்பென்ஸர், கிறிஸ் ராக் உள்ளிட்டோர் நடித்து வரும் ஹாலிவுட் படம் விட்சஸ். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இங்கிலாந்தின் லீவ்ஸ்டென் பகுதியில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நேற்று படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து வரை சென்றுள்ளது.
ஒரு நபர் தான் வைத்திருந்த கத்தியால் மற்றொருவரின் கழுத்தில் குத்திவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த நபரை குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கத்திக்குத்து வாங்கிய நபருக்கு குத்திய நபரை ஏற்கனவே நன்றாக தெரியும் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஏன் கத்திக்குத்து நடந்தது என்று விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் நடந்தபோது ஆன் ஹாதவே எங்கிருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அவரோ அல்லது படக்குழுவை சேர்ந்த வேறு யாராவதோ கத்திக்குத்து சம்பவத்தை பார்த்தார்களா என்பதும் தெரியவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் செய்தித் தொடர்பாளர் பிரபல நாளிதழிடம் கூறியதாவது,
படப்பிடிப்பு தளத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது உண்மை தான். இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
மும்பையில் ஃபிக்சர் வெப் தொடரின் ஷூட்டிங் நடந்த பேக்டரிக்குள் புகுந்த 4 பேர் நடிகை மாஹி கில், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோரை தாக்கி காயப்படுத்தினார்கள். இந்நிலையில் விட்சஸ் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவை சேர்ந்த இருவர் சண்டை போட்டு கத்திக்குத்தில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











