குறும்படங்களுக்கு தியேட்டர் ப்ரீ! - 'அபிராமி' தந்த இன்ப அதிர்ச்சி
'தரமான குறும்படங்களைத் திரையிட இலவசமாகவே திரையரங்கு தரத் தயார்' என அபிராமி மெகாமால் உரிமையாளரும், சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை அரங்கில் அண்மையில் மூன்று குறும்பட வெளியீடு நடைபெற்றது.
இந்தக் குறும்பட வெளியீட்டின்போது சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசியதாவது:
"நல்ல கருத்துகளை வெளிப்படுத்தி, மக்கள் ரசனையை மேம்படுத்தும் குறும்படங்கள் வரவேற்கத்தக்கவை. எங்களுடைய அபிராமி மெகாமால் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஒவ்வொரு வாரமும் காலை 10 மணி காட்சியைக் குறும்படங்களைத் திரையிடுவதற்கென இலவசமாக வழங்குகிறேன்.
நான் இலவசமாக வழங்கினாலும் அரசு விதிக்கும் வரியிலிருந்து விலக்கு பெற முதல்வரைத்தான் சந்திக்க வேண்டும். மின்சாரக் கட்டணத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். குறும்படப் படைப்பாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்திக்கொள்ளலாம்" என்றார்.
அபிராமி ராமநாதனின் இந்த அறிவிப்பு, குறும்பட இயக்குநர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications











