இளையராஜா இல்லாமல் சினிமா இல்லை - குல்சார்

25 ஆண்டுகளுக்குப் பிறகு குல்சாரும் இளையராஜாவும் மீண்டும் இணைகிறார்கள், பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மாவின் பேரன் தயாரிக்கும் புதிய படத்தில்.
இந்தப் படத்தில் ஒரு புதுமையாக, குல்சாரின் கவிதைகளையே பாடல்களாக்குகிறார் ராஜா. இருவரும் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய படம் கமல்ஹாஸனின் சத்மா (மூன்றாம் பிறை).
ஆனால் அதன்பிறகு பல இந்திப் படங்களில் இளையராஜா பணியாற்றினாலும் தென்னிந்திய சினிமா போல ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. (ஆனால் ராஜாவின் இந்தக் குறையை அவரிடமிருந்து சென்ற ரஹ்மான் வட்டியும் முதலுமாகத் தீர்த்து வைத்துவிட்டார். இன்று பாலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் ரஹ்மான்தான்!)
கடந்த ஆண்டு இளையராஜா இசையில் அமிதாப் நடித்து வெளியான 'சீனி கும்' பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மௌன ராகம் படத்தின் ஒரு பாடலை எஸ்பிபியை வைத்து ராஜா செய்த ரீமிக்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. மற்ற பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. பின்னணி இசையை அமிதாப் பெரிதும் பாராட்டியிருந்தார்.
இப்போது இந்தியில் 4 புதிய படங்களுக்கு இசையமைக்கிறார் இளையராஜா. அதில் ஒன்று பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பேரன் அஜய் வர்மா தயாரிக்கும் படம். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் குல்சார்தான். வழக்கம்போல மெட்டுக்குப் பாடல்கள் என்றில்லாமல் குல்சாரின் புகழ்பெற்ற கவிதைகளையே பாடலாக்குகிறார் இசைஞானி.
சமீபத்தில் ரஹ்மானிடன் இணைந்து ஜெய் ஹோ பாடலுக்காக ஆஸ்கர் வென்ற குல்சார் சிஎன்என்னுக்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஹ்மான் ஒரு அதிசயமான மனிதர். நிறைய திறமைகள் கொட்டிக் கிடக்கும் இளைஞர். என்னைப் பொறுத்தவரை 43 வயதும் இளமைதான்! ஆர்டிபர்மனுக்குப் பிறகு அந்தப பாணி இசைக்கு பாலிவுட்டில் ஒரு வெற்றிடம் இருந்தது. 'பஞ்சம்தா' (ஆர்டி பர்மனை இப்படித்தான் அவருக்கு நெருக்கமானவர்கள் அழைப்பார்கள்!) வுடன் ரஹ்மான் இசையை ஒப்பிட முடியாது என்றாலும், அந்த இசைக்கு ஏங்கியவர்களின் தாகம் இவரது இசை மூலம் ஓரளவு தணிந்திருக்கிறது என்பேன். ரஹ்மானுடன் பணியாற்றியது எனக்கு ஒரு அரிய வாய்ப்புதான். இந்த ஆஸ்கரில் என்னுடைய பங்கை அவருக்கே சமர்பிக்க விரும்புகிறேன்.
இப்போது எனக்கு இன்னொரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அது ரஹ்மானின் குரு இளையராஜாவுடன் பணிபுரிய எனக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு.
அவரைப் பற்றி சொல்ல ஏராளம் உள்ளது. இத்தனைக்கும் நானும் அவரும் கடைசியாகப் பணியாற்றிய படம் சத்மா. 25 நீண்ட ஆண்டுகளாகி விட்டன. ஒரு திரைப்படத்தை இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் என பல கலைஞர்கள் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனால் அந்த மொத்தப் படத்துக்கும் ஒரு புதிய பரிமாணத்தைத் தர ஒருவரால் முடியும் என்றால் அது இளையராஜா மட்டும்தான். அசாதாரணமான கலைஞர்.
ஒரு தட்டில், ஒரு படத்தின் கலைஞர்களையும் மறு தட்டில் இளையராஜாவையும் வைத்துப் பார்த்தால், இரண்டுமே சமமாக இருக்கும். அப்படி ஒரு மகத்தான கலைஞரின் இசையை இந்தி சினிமா அடிக்கடி கேட்க முடியாமல் போனது பாலிவுட்டுக்குதான் நஷ்டம். இனி அடிக்கடி ராஜாவின் இசை பாலிவுட்டில் ஒலிக்கும் என நம்புகிறேன்.
நான்கு படங்கள் அவரது இசையில் உருவாவதாக இயக்குநர் பால்கி சொன்னார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ராஜா சாப், ரஹ்மான் போன்றவர்களால் இந்திய சினிமா மேலும் மேலும் செழுமை பெறட்டும், என்றார் குல்சார்.
தென்னக திரையுலகின் இரு 'கண்களை', பாலிவுட்டின் 'ஞானக் கண்' பாராட்டியிருப்பது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெருமை!


Click it and Unblock the Notifications











