ஆசிரியர் திட்டியதால் பிரகதி மகன் ஓட்டம்

சரியாகப் படிக்காதது தொடர்பாக ஆசிரியர் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிய நடிகை பிரகதியின் மகனை போலீஸார் மீட்டனர்.
வீட்ல விசேஷங்க படம் மூலம் அறிமுகமானவர் பிரகதி. அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது திருமணமாகி, கணவருடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.
இவருக்கு, மனீஷ் ராஜ்குமார் (13) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சரியாகப் படிக்க மாட்டார் எதனத் தெரிகிறது. இதனால் அடிக்கடி அவரை ஆசிரியர்கள் திட்டுவது வழக்கமாம்.
இந்த நிலையில் சமீபத்திய தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியுள்ளார் மனீஷ். இதையடுத்து பெற்றோரை அழைத்து வருமாறு, பள்ளியில் கூறியுள்ளனர். இதையடுத்து பிரகதி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆனால் அன்று மாலை, பள்ளி முடிந்து நெடு நேரமாகியும் மனீஷ் வீடு திரும்பவில்லை. இரவாகி விட்டதால் பிரகதி பதறிப் போய் தெரிந்தவர்கள், நண்பர்கள் வீடுகளுக்குப் போன் செய்து பார்த்தார். மனீஷ் குறித்துத் தெரியவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார்.
கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில் மனீஷ் கிழக்குகக் கடற்கரைச் சாலையில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு அழைத்து வந்தனர். விசாரித்தபோது, ஆசிரியர்கள் திட்டியதால், வீட்டை விட்டு வெளியேறியதாக மனீஷ் கூறியுள்ளார். இதையடுத்து அவரை பிரகதியிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.


Click it and Unblock the Notifications











