சமாதானக் கொடி பறக்கவிட்ட வெங்கட் - அமுதன்!
ஏப்ரல் முதல் தேதியான இன்று இயக்குநர்கள் வெங்கட் பிரபுவும் சிஎஸ் அமுதனும் ஒருவருக்கொருவர் 'பழம்' விட்டுக் கொண்டதுடன், ரசிகர்களை ஏப்ரல் பூல்களாக்கிவிட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாக்களை கலாய்த்து படமெடுக்கும் (ஸ்பூஃப் படமாம்!) இந்த இரு இயக்குநர்களும் சமீப காலமாக கடுமையாக மோதிக் கொண்டார்கள்.
குறிப்பாக வெங்கட் பிரபுவின் கோவா பற்றி சிஎஸ் அமுதன் சில கருத்துக்களைக் கூற பதிலுக்கு, வெங்கட்டும் பேசினார். இதன் உச்சகட்டமாக, வெங்கட் பிரபுவின் குடும்பம் பற்றி தனிப்பட்ட முறையில் கமெண்ட் அடித்தாராம் அமுதன். இதைத் தொடர்ந்து ஒரு டிவி ஷோவில் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
இருவருமே அடுத்தவர்களின் படங்களைக் கிண்டலடித்துப் படங்களை எடுத்துவிட்டு, தங்கள் படங்களை மற்றவர்கள் கிண்டல் செய்யக் கூடாது என்று கூறியதுதான் வேடிக்கை.
இந்த நிலையில் இருவரையும் அவர்களது நண்பர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து நாங்கள் இப்போது 'பழம்' விட்டுக்கிட்டோமே என சின்னப் புள்ளைங்க கணக்காக பொது இடங்களில் கட்டிப் பிடித்தும் கை குலுக்கியும் தங்கள் புதிய நட்பை பறை சாட்டினர். உச்சகட்டமாக, இன்றைய நாளிதழ்களில் வெளியான விளம்பரங்களில், 'நாங்க சண்டை போட்டுக்கவே இல்லை... ஏப்ரல் பூல்' என்றும், 'எனக்கு கோவா ரொம்பப் பிடிக்கும்' என அமுதனும், 'எனக்கு தமிழ்ப் படம்' ரொம்பப் பிடிக்கும் என்று வெங்கட்டும் சொல்வது போல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த சமாதானப் படத்தின் பின்னணியிலிருந்தவர்? ஆம்... நீங்கள் நினைப்பது சரிதான்... அவர் தயாநிதி அழகிரி. இருவருமே தயாநிதி பேனரில் படம் பண்ணவிருக்கிறார்கள் என்பது முக்கியமான செய்தி!


Click it and Unblock the Notifications











