twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சிவாஜியைச் சந்தித்தேன்!' - சிலிர்க்கும் லேகா ரத்னகுமார்

    |

    Sivaji Ganesan with Lekha Rathnakumar
    அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒரு படமாவது எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்பது இன்றைய பல நட்சத்திரங்களின், கலைஞர்களின் ஏக்கம்.

    சமீபத்தில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை எடுத்த அருண் வைத்தியநாதனுக்குக் கூட அப்படியொரு ஏக்கம் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் லேகா ரத்னகுமார் மிகவும் அதிர்ஷ்டசாலி.

    இவர் எண்பதுகளிலேயே சிவாஜியைச் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.

    அடடா... கொடுத்து வைத்த மனிதர்தான் என்கிறீர்களா... சரி.. சிவாஜியை இவர் எப்படிச் சந்தித்தார்?

    அந்த அனுபவத்தை அவரே சொல்கிறார்:

    "தூர்தர்ஷனுக்காக இருட்டில் ஒரு வானம்பாடி என்று ஒரு தொடரை நான் எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

    அந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பண்டரிபாய். பாராசக்தி படத்தில் சிவாஜியின் முதல் ஜோடியே இவர்தானே.. ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவ, எல்லோருமே இடிந்து போனோம். அப்போது நான் பண்டரிபாயிடம் சிவாஜி மீது நான் வைத்திருந்த மரியாதை பற்றியெல்லாம் சொல்லி, அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டேன்.

    ஆனால் பின்னர்தான் சிவாஜி இறந்ததாக வந்தது ஒரு வதந்தி என்பது தெரிந்தது. இந்த விஷயத்தை சிவாஜியிடமே பண்டரிபாய் சொல்ல, "அந்த தம்பியை அழைச்சிட்டு வாயேன்" என்று கூறியிருக்கிறார் சிவாஜி. என்னிடம் இதை பண்டரிபாய் சொன்னபோது, ஆனந்தத்தில் அதிர்ந்து போனேன்.

    அவரை பார்க்கணும் என்பது என் பல நாள் கனவு. அவரே வரச் சொல்லிவிட்டதால் பயங்கர முன்னேற்பாடுகளுடன் அன்னை இல்லத்துக்கு குடும்பத்தோடு போனேன். கூடவே பண்டரிபாய் அம்மா மற்றும் போட்டோகிராபரையும் கூட்டிப் போனேன்.

    மாடியில் அவருக்காகக் காத்திருந்தபோது, என்னவெல்லாம் பேசலாம் என ஒரு ஒத்திகையே பார்த்துவிட்டேன் உள்ளுக்குள்.

    அப்போதுதான் அவர் வந்தார். கண்களில் அப்படியொரு தீட்சண்யம். அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் மறந்தே போனேன்.

    கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஸ்டைலான ஆங்கில உச்சரிப்புக்குச் சொந்தக்காரரை இதுவரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை. அப்படி ஒரு அசத்தலான ஸ்டைல் போங்க.

    பண்டரிபாய் அவர் காலில் விழுந்து ஆசி பெற்ற போது, ஒரு ராஜாவுக்குரிய கம்பீரத்தோடு அவர் வாழ்த்திய விதம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

    நாங்கள் எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

    பின்னர் அவர் என்னிடம் இப்படிச் சொன்னார்: 'உங்க கூட போட்டோ எடுத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!'

    இதை என்னவென்று சொல்வது... ஒரு இளம் கலைஞரை சந்தோஷப்படுத்த அவர் கூறிய பெருந்தன்மையான வார்த்தைகளைப் பாருங்கள். உயர்ந்த மனிதர்களின் இயல்பும் உயர்ந்ததாகத்தானே இருக்கும்!

    நாங்கள் அவர் இல்லத்தை விட்டுக் கிளம்பும்போது, "ஓய்வா இருக்கும்போதெல்லாம் அவசியமா வாங்க..." என்றவர், தனக்கே உரிய ஸ்டைலில் சற்று நிறுத்தி, நிமிர்ந்து பார்த்து, "ஐ மீன் நான் ஓய்வா இருக்கும் போதெல்லாம்!" என்று சிரிக்காமல் முடித்தார்.

    பிறவிக் கலைஞன் அவர்... உண்மையிலேயே இமயத்தை தரிசித்த அனுபவம் எனக்கு!" என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார்.

    பெருமையாகத்தான் இருந்தது!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X