கருணாநிதியின் புதிய படம்... தயாரிப்பு இளையராஜா?

முதல்வர் கருணாநிதியின் சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதைதான் உளியின் ஓசை என்ற படமாக வெளிவந்தது. அந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். 100 நாட்கள் ஓடிய இந்தப் படத்தின் கதை தனக்கு மிகப் பிடித்தமான ஒன்று என்று தெரிவித்த இளையராஜா, முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றைத் தயாரிக்க விரும்புவதாக கூற, உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார் முதல்வர்.
இந்தப் படத்தையும் உளியின் ஓசை படத்தைத் இயக்கிய இளவேனில்தான் இயக்குகிறார். இதுவரை முதல்வர் கதை வசனம் எழுதிய படங்களிலேயே மிக வித்தியாசமானதாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். கருணாநிதியின் புகழ்பெற்ற பாத்திரப் படைப்புகள் இந்தப் படத்தில் இடம்பெறுவதாக காட்சிகள் அமைக்கப் போகிறாராம் இளவேனில்.
சமீப காலத்தில் இசைஞானியின் படங்களில் பெரிதாக பாடல்கள் ஹிட் ஆகவில்லையே என்ற அவர்களது ரசிகர்களின் குறையும் நீங்கும் அளவுக்கு இந்தப் படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ளதாக அமையும் என்கிறார்கள்.
இதற்கிடையே, பெண்சிங்கம் படத்தையடுத்து, புதிய படத்தைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது நந்தினி ஆர்ட்ஸ். மீண்டும் கருணாநிதியின் கதை வசனத்தில் பாலி ஸ்ரீ ரங்கத்தை வைத்து புதிய பட பூஜைக்கு தயாராகிறது இந்த நிறுவனம்.


Click it and Unblock the Notifications











