சன் - கலைஞர்: இரண்டிலுமே 'ரஜினி தீபாவளி'!
வெளியாகி 1 மாதத்தைக் கடந்த பின்னும் திரையரங்குகளில் திருவிழாக் கோலம் காண்கிறது ரஜினியின் எந்திரன்.
அடுத்து சின்னத்திரையிலும் அவரது ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் தொடர்கின்றன. குறிப்பாக இந்த தீபாவளி, 'ரஜினி தீபாவளி' எனும் அளவுக்கு ரஜினி படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்தான்.
தொலைக்காட்சியுலகின் முக்கிய சேனல்களான சன் மற்றும் கலைஞர் இரண்டிலும் ரஜினி ஸ்பெஷல்தான். ரசிகர்களை வேறு சேனல் பக்கமே திரும்பவிடாத அளவுக்கு அதிரடி நிகழ்ச்சிகள் மற்றும் படத்தை இந்த சேனல்கள் ஒளிபரப்புகின்றன.
சன் டிவியில் 'மேக்கிங் ஆப் எந்திரன்' என்ற சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்புகிறது. எந்திரன் திரைப்படம் உருவான விதம், அதில் ரஜினி ரோபோவாக எப்படி நடித்தார், அதில் உபயோகிக்கப்பட்ட அனிமேட்ரானிக்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை காட்டப் போகிறார்கள்.
குறிப்பாக, 'ரயில் சண்டைக் காட்சியில் பயன்படுத்தப்பட்டது டூப் இல்லை, தண்டவாளத்தின் மீதும், ரயில் வண்டியின் மீதும் ஒடுவது, சண்டை போடுவது எல்லாமே வேறு ஸ்டன்ட் நடிகர் அல்ல, ரஜினியே' என்பதை விவரமாகக் காட்டப் போவதாக சன் டிவி தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக மாலை 5.30 மணிக்கே கலைஞர் டிவியில் ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான சிவாஜி - தி பாஸ் படத்தை ஒளிபரப்புகிறார்கள்.
உலக அளவில் இந்தியப் படங்களின் மார்க்கெட்டை புதுப்பித்துக் கொடுத்த பெருமை சிவாஜிக்கே உண்டு. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்று பாராட்டப்பட்டது. ரஜினிக்கு பிரதமர் கையால் விருது வாங்கிக் கொடுத்த படம். இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னும் பின்னும் மற்ற சேனல்களும் ரஜினி பற்றிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications