என் நண்பன் சிவாஜி ... கருணாநிதி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 80வது பிறந்த நாள் டாக்டர் சிவாஜி நினைவுப் பரிசு விழா, இந்திய திரைப்பட துறை மற்றும் நாட்டியத் துறையில் முத்திரை பதித்த லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரது சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் அறிவாலயத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முதல்வர் கருணாநிதி, இசை அமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி, நடிகைகள் சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, சச்சு, கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ், கலைத்துறை மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு டாக்டர் சிவாஜி நினைவு பரிசை வழங்கினார். பின்னர் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரது சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் சிவாஜியுடனான தனது தொடர்புகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார். கருணாநிதியின் பேச்சிலிருந்து ...
சிவாஜிக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்பதை கூற விரும்புகிறேன். அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் அல்லது சந்திரமோகன் என்ற நாடகத்தில் நடிக்கமாறு சில பெரிய நடிகர்களிடம் கேட்டார். இந்த நாடகம் இயக்க பிரசாரத்துக்காக அல்ல, சமுதாய மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
சிலர் அவர்களை பயமுறுத்தியதால் நாடக பாடத்தை திருப்பி கொடுத்துவிட்டனர்.இதையடுத்து நாடக நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி மூலமாக வி.சி.கணேசனை சந்தித்து நாடகத்தில் நடக்க முடியுமா என்று கேட்டார். மன்னிக்க வேண்டும். வி.சி.கணேசன் என்று அழைத்ததற்காக.
நாடகத்தி்ல் நடிக்க வி.சி.கணேசன் சம்மதித்தார். ஒற்றை வாடை தியேட்டரில் அந்த நாடகங்கள் பெரியாரின் தலைமையில் நடந்தது. நாடகத்தை பார்த்த பெரியார் கடைசியில் பேசியபோது, இந்த நாடகத்தில் சிவாஜியாக ஒருவர் நடித்தாரே, அவர் அசல் சிவாஜியாகவே இருக்கிறார். நான் அவரை சிவாஜி என்றே அழைப்பேன் என்றார்.
அண்ணா எழுதிய நாடகத்தில் வி.சி.கணேசன்தான் அன்று முதல் சிவாஜி என்று அழைக்கப்பட்டார். இதுதான் சிவாஜி பிறந்த கதை. சிவாஜி மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர் என்று வரலாறு சொன்னாலும், நம்முடைய சிவாஜி நமக்கு எழுதி வைத்த வரலாறு இதுதான். சிவாஜிதான், சிவாஜி கணேசனாக, நடிகர் திலகமாக, செவாலியேவாக உலகம் புகழ் பெற்ற நடிகராக விளங்கினார்.
அப்போது அரசியல் உறவிலே சிறிது காயம் ஏற்பட்ட நிலை. அப்படி இருந்தும் கூட அண்ணா என்னோடு அண்ணாமலை மன்றத்தில் நடந்த கட்டபொம்மன் நாடகத்துக்கு வந்தார். ஏவிஎம் திடீரென்று அண்ணாவை பேச அழைத்தார். அப்போது, அண்ணா பேசும்போது, சிவாஜிக்கு ஈடாக நடிப்பதற்கு உலகத்தில் இன்னும் யாரும் பிறக்கவில்லை என்றார்.
நீ எங்கிருந்தாலும் வாழ்க என்றார் அண்ணா. அதை அண்ணா தனக்கே உரிய நாகரீக மொழியில் நயம்மிகு தமிழில் தம்பி சிவாஜி நீ எங்கிருந்தாலும் வாழ்க என்றார். அப்போது சிவாஜி நம்மோடு இல்லை. இப்போது எங்கும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் சிவாஜி.
சிவாஜி சிலையை கடற்கரையில் திறந்து வைத்தபோது உணர்ச்சிவயப்பட்டேன். என் மனசாட்சி போன்ற கண்மணி மாறன் மறைந்தபோது உணர்ச்சிவயப்பட்டேன். சிவாஜியை நினைக்கும்போதெல்லாம் உணர்ச்சிவயப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.
கலை, இலக்கியம், சிவாஜியின் நடிப்புத் திறன், நட்பு, பழகும் தன்மை, பாச உணர்வு இவைகள் எல்லாம் எங்கள் இருவரையும் கட்டிப்போட்ட மந்திர கயிறுகள். அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட நேரத்தில் நானும், நான் கஷ்டப்பட்ட நேரத்தில் அவரும் கஷ்டப்பட்டிருக்கிறார். ஒரே இலையில் சாப்பிட்ட நண்பர்களாக-சகோதரர்களாக பழகியவர்கள் நாங்கள்.
சிவாஜி-கமலா சீர்திருத்த திருமணத்தின்போது மாப்பிள்ளை தோழனாக இருந்தேன். அந்த குடும்பத்தில் ஒருவனாக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன்.
கழகத்தில் அவர் உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில், வெள்ள மற்றும் புயல் நிவாரண நிதி திரட்ட நாடகம் நடத்திபோது நானும் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தேன். இப்படித்தான் சொல்ல வேண்டும். என்னோடு அவர் சேர்ந்து நடித்தார் என்றா சொல்ல முடியும்
பிள்ளைகளாக தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை பிரபு, ராம்குமார் ஆகியோரெல்லாம் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். நண்பனாக நான் என்னுடைய கடமையை கடற்கரையில் ஆற்றியிருக்கிறேன் என்றார் கருணாநிதி.


Click it and Unblock the Notifications











