2009-நம்பிக்கை படங்கள்: பாகம்-2

6.வில்லு:
இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்க்கு மட்டுமல்ல, தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் ஐங்கரன் நிறுவனத்துக்கும் இந்தப் படத்தின் வெற்றி மிகவும் முக்கியம். பிரபு தேவா இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் (ஜனவரி-9) வெளியாகவுள்ள வில்லு, இன்னும் ஒரு போக்கிரியாக வசூலில் வெற்றிக் கொடி நாட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரபு தேவா.
படத்தின் பாடல்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல பிக்கப் ஆகியுள்ளன. பார்க்கலாம்.
7. அசோகவனம் அல்லது ராவணன்:
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ராவணன் இந்திப் படத்தின் தமிழ் வடிவத்துக்கு தற்காலிகமாக அசோகவனம் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் இது முடிவான பெயரா, தெரியவில்லை.
கிட்டத்தட்ட எந்திரன் பட ரேஞ்சுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தால் பட்ஜெட் போடப்பட்ட படம். ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியால் ரிலையன்ஸ் விலகிக்கொள்ள இப்போதைக்கு மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸே இந்தப் படத்தை திட்டமிட்டபடி ரூ.120 கோடியில் தயாரித்து வருவதாகக் கூறப்படுக்கிறது.
ஐஸ்வர்யா ராய், விக்ரம், அபிஷேக் பச்சன் என இந்தியாவின் டாப் கிளாஸ் நடிகர்கள் பங்கேற்கும் இந்தப் படத்தையும் நாடே எதிர்பார்க்கிறது.
8. அயன்:
பேரழகன் பிரச்சினையால் ஏவிஎம் காம்பவுண்ட் பக்கமே வரமாட்டேன் என கோபித்துக் கொண்டு போன சூர்யா மனம் மாறி அதே ஏவிஎம்முக்கு செய்து தரும் பிரமாண்ட படம் இது. தமன்னா நாயகியாக நடிக்கும் முதல் பெரிய பட்ஜெட் படமும் இதுதான்.
கேவி ஆனந்தின் இயக்கத்தில் படம் சிறப்பாக வந்திருப்பதாக முதல் தகவல்கள் கூறுகின்றன. சிவாஜிக்குப் பிறகு ஏவிஎம் தயாரிக்கும் படம் இது. அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வார்களா... பார்ப்போம்.
9.படிக்காதவன்:
மாமனாரின் தலைப்புகளை வைத்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் தனுஷ் தேர்வு செய்த தலைப்புகளில் ஒன்று இந்த படிக்காதவன். அதைவிட பெரிய நம்பிக்கை இப்போது படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி இருப்பது.
காதல், ஆக்ஷன், காமெடி என சகல மசாலாக்களையும் மணக்க மணக்க சேர்த்திருக்கிறாராம் இந்தப் படத்தில் இயக்குநர் சுராஜ்.
பட்டையக் கிளப்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். படம் பொங்கலுக்கு ரிலீஸ்
10. கோவா:
சென்னை 28, சரோஜா என இரண்டு வெற்றிப் படங்கள் மூலம் முன்னணி இயக்குனராகியிருக்கும் வெங்கட் பிரபு, சௌந்தர்யா ரஜினிகாந்துக்காக இயக்கும் படம் கோவா. இதில் ஹாலிவுட் புகழ் ஜெஸிகா ஆல்பாவும் நடிக்கிறாராம். இன்றைய இளைஞர்களின் நாடித் துடிப்பை நன்கு புரிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு இந்தப் படத்திலும் தன்னை நிரூபிப்பார் என நம்புகிறார்கள்.
இந்த 10 படங்களைத் தவிர, அமீர் நடிக்கும்ம் யோகி, ஜெயம் ரவி நடிப்பில் ஜனநாதன் உருவாக்கி வரும் பேராண்மை, மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் தயாராகி நிற்கும் நந்தலாலா, வசந்த பாலன் இயக்கும் அங்காடித் தெரு, விஷ்ணுவர்தனின் சர்வம், அஜீத்தின் பெயரிடப்படாத சிவாஜி பிலிம்ஸ் படம், பாக்யராஜின் புதிய வார்ப்புகள், சரத்குமார்-ஸ்ரேயா நடிக்கும் ஜக்குபாய், லிங்குசாமியின் பையா (இந்த வருஷம் முடிச்சிருவாரா...!) என மேலும் சுவாரஸ்யமான படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டை விட இந்த ஆண்டு மிகச் சிறப்பான வருடமாக கோலிவுட்டுக்கு அமையப்போகிறது. வருடம் முழுவதும் நடக்கப் போகும் இந்த திரைத் திருவிழாவுக்கு இப்போதே தயார்படுத்திக்கோங்க!!


Click it and Unblock the Notifications











