twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் 'நிலைய வித்வானா?'-கமல்

    By Staff
    |

    Kamal Haasan
    ஒரு தலைவரை சந்தித்த உணர்வு நமக்கு ஏற்படாத வகையில் தொடர்ந்து தன்னை எளிமை நிலையிலேயே வைத்திருக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து வியக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

    மு.க.ஸ்டாலின் குறித்து பத்திரிகையாளர் சோலை எழுதிய, 'ஸ்டாலின், மூத்த பத்திரிகையாளர் பார்வையில்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    விழாவில் நூலாசிரியர் சோலை, விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமலர் நிர்வாகி ஆர்.ஆர்.கோபால்ஜி,

    மாலை மலர் நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், குமுதம் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பா.வரதராஜன், நடிகர் கமல்ஹாசன், விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திக தலைவருமான கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்து ஆசிரியர் ராம் பேசுகையில், 'இந்த விழாவில், ஒரு தனிப்பட்ட மனிதரை பாராட்டிக் கொண்டிருக்கிறோமோ அல்லது ஒரு இயக்கத்தை அவர் பெயரால் பாராட்டிக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

    தமிழகத்தில் பெரிய அளவில் சமூக-அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தது திராவிட இயக்கமாகும். பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் அங்கிருந்து பிரிந்து போனவர்கள் ஆற்றிய பங்கு தமிழகத்துக்கு மகத்தானது.

    மக்களோடு நெருங்கிச் சென்றது முதலில் திராவிட இயக்கம் தான். அந்த இயக்கத்தை சேர்ந்தவர் தான் ஸ்டாலின். ஆனால், அவர் திடீரென்று முளைத்து விடவில்லை. படிப்படியாக சிரமப்பட்டே இந்த நிலைக்கு வந்தார் என்றார்.

    கமல்ஹாசன் பேசுகையில், 'இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு அருகதை இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தேன். நான் ஒரு பத்திரிகையை நடத்தினேன் என்பது கூட தெரியாத ஒரு பத்திரிகை ஆசிரியன்.

    அதனால் கடைநிலை, கத்துக்குட்டி பத்திரிகை ஆசிரியன் என்ற நிலையில் இங்கு நான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

    எனக்கு கருப்பு ரொம்ப பிடிக்கும். சிவப்பும் தான். கருப்பும், சிவப்பும் கூட பிடிக்கும். ஆனால் எந்நேரமும் அதை பூசிக் கொள்ள மாட்டேன். அந்த வண்ணங்கள் எல்லாம் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எழுந்தவை. அவற்றை தேவைப்படும்போது பூசிக் கொள்ளலாம்.

    கலைஞர் பாராட்டு விழாவில் அதிக அளவில் கலந்து கொள்ளும் 'நிலைய வித்வான்' என்று என்னை பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.

    இந்த விழாவில் இருக்கும் வித்வான்களை பாருங்கள். நான் தேவையான பாட்டைத்தான் பாடிக் கொண்டிருக்கிறேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது.

    இந்த புத்தகத்தில் கருப்பும், சிவப்பும் உள்ளது. இந்து ராம் கூறியது போல், பெரியார் பற்றிய விரிவான புத்தகம் வெளிவர வேண்டும். ஸ்டாலின் பற்றிய இந்நூல், தனி மனிதனைப் பற்றியதாக அமையவில்லை. மர்ஜென்சியின்போது எழுந்த முக்கிய திராவிட குரல்களின் ஒன்று அது. இந்த குரலை மேம்படுத்த வேண்டிய கடமை தமிழனுக்கு உள்ளது.

    நான் ஸ்டாலினை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒரு தலைவரை சந்தித்த உணர்வு நமக்கு ஏற்படாத வகையில் தொடர்ந்து தன்னை அந்த எளிமை நிலையிலேயே அவர் வைத்திருக்கிறார்.

    அதை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த குணாதிசயம் எப்படி வந்தது என்பது பற்றி இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X