twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்

    By Sudha
    |

    Kamalhassan
    நடிகர் கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பாராட்டியுள்ளார்.

    திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கலைஞானி கமல்ஹாசன். இதையடுத்து அவருக்கு மத்திய அரசு திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்து கெளரவித்துள்ளது.

    இந்த சிறப்பு 3 நாள் திரைப்பட விழா நேற்று டெல்லியில் ஸ்ரீபோர்ட் அரங்கில் தொடங்கியது. விழாவில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொண்டார். படப்பிடிப்புக்காக இத்தாலியில் இருந்த கமல்ஹாசன் இந்த விழாவுக்காக பிரத்யேகமாக வந்திருந்தார். நடிகை கெளதமி, அவரது மகள் சுப்புலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் அம்பிகா சோனி பேசுகையி்ல, கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். இந்த விழாவுக்காக இத்தாலியில் நடந்து வரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு பறந்து வந்துள்ள அவரை பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராட்டினார். பின்னர் கமல்ஹாசனுக்கு பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தார்.

    நிகழ்ச்சியில் முதலில் ஹே ராம் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விருமாண்டி, தேவர் மகன், நாயகம், சாகர சங்கமம், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் ஆகிய படங்கள் இன்றும் நாளையும் திரையிடப்படுகின்றன.

    நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசன் பேசுகையில், நான் கடந்து வந்த இந்த 50 ஆண்டுளை குறுகியதாகவே கருதுகிறேன். எனக்கு இந்தக் காலம் போதாது. அடுத்த பத்து ஆண்டுகள் எனக்கு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன்.

    எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அல்லது குருக்கள்தான் நான் இன்று இங்கு இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் என்பதை விட குருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பாஸ் இல்லை, குருக்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.

    டி.கே.சண்முகம், கே.பாலச்சந்தர், நடன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் கே.பாலச்சந்தர். அவரது பாசறையில் இருந்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் முன் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து, சுய சிந்தனையுடன் நான் விரும்பிய பணியை எனது ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்தேன்.

    மணிரத்னத்தின் நாயகன் படத்துக்காக அவருடன் சேருவதற்கு முன்பே, அவரது பல படங்களில் நடிக்க முயற்சித்தும் நேரமின்மையால் முடியாமல் போனது.

    எனக்கு அங்கீகாரம் கிடைக்க சில காலம் ஆனாலும் முன்னேறுபவர்களை முன்னேற்றுவதற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எங்களைப் போன்றவர்களை கவுரவிக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு நினைத்தால், என்னைப் போன்றவர்கள் வளருவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.

    எனது தந்தை நான் வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதே சமயம் எனது குடும்பத்தார் அனைவரும் நான் நடிப்புத்துறையில் பரிணமிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன்.

    மேற்கத்திய நாடுகள் நமக்குத் தரும் பாராட்டுக்களை விட அதிகஅளவிலான பாராட்டுக்குத் தகுதி பெற்றது நமது இந்திய சினிமா. டைம் பத்திரிக்கை போன்றவற்றுக்கு நாம் இதை உணர்த்த வேண்டும். உங்களை விட எங்களது படங்கள் தரமானவை என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

    எனது சினிமாத் துறை உலக சினிமாக்களை விட தரமானது, குறைந்ததில்லை என்பதில் எனக்குப் பெருமை நிறைய உண்டு. நாம் நமது உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே மனதில் வைத்துப் படம் எடுக்கிறோம். எனவேதான் அந்த தரத்தில்தான் நமது படங்கள் உள்ளன. இது தரக்குறைவு இல்லை.

    நான் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார் கமல் ஹாசன்.

    50 ஆண்டுகளை திரையுலகில் பூர்த்தி செய்துள்ள கமல் ஹாசன் தனது 5 வயதில் நடிக்க வந்தார். 1959ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படம் தான் கமலின் முதல் படம். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் கமல்.

    அன்று தொடங்கிய கமலின் விருது வேட்டை இன்று வரை தொய்வின்றி தொடர்கிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், மொத்தம் 28 முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இதில் 4 விருதுகள் தேசிய விருதுகளாகும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X