twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் புறக்கணிக்கல.. மீனா!

    By Staff
    |

    Nayanatara
    சென்னையில் இருந்து கொண்டே குசேலன் படவிழாவுக்கு வராமல் புறக்கணித்த நடிகைகள் மீனா, நயன்தாரா ஆகியோரை இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் வாசு ஆகியோர் கடுமையாக கண்டித்த்தைத் தொடர்ந்து இருவரும் இன்று விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளனர் கவிதாலயாவுக்கு.

    மேலும், தாங்கள் இந்த விழாவை வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என்றும், படப்பிடிப்பில் பிஸியாக இருந்த்தால் வரமுடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து தனியாக ரஜினியைச் சந்தித்து நயன்தாரா மன்னிப்புக் கோரியுள்ளார்.

    ரஜினிகாந்த்-நயன்தாரா ஜோடியாக நடித்து, பி.வாசு டைரக்டு செய்துள்ள குசேலன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

    குசேலன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த 30-ந் தேதி சென்னையில் ல4 ராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. அதில் ரஜினிகாந்த், டைரக்டர்கள் பி.வாசு, கே.பாலச்சந்தர், பாரதிராஜா, நடிகர் அர்ஜூன் உள்பட திரையுலக பிரமுகர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

    அந்த விழாவில், படத்தின் கதாநாயகிகள் மீனா-நயன்தாரா மற்றும் அந்த படத்தில் நடித்துள்ள பசுபதி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த 3 பேரும் விழாவை புறக்கணித்துவிட்டதாக வதந்திகள் பரவியது.

    இதனால் கடும் அதிருப்தியடைந்த இயக்குநர் வாசு, சம்பந்தப்பட்ட மூவரையுமே போனில் பிடித்து கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. படத்தை தயாரித்துள்ள பாலச்சந்தரும் கண்டித்துள்ளார்.

    'வாய்ப்புகளே இல்லாமல் சும்மா இருந்த உன்னை சூப்பர் ஸ்டார் பட நாயகியாக்கியதற்கு நல்ல பலனைக் கொடுத்துவிட்டாய்' என மீனாவிடம் கடிந்து கொண்டாராம் வாசு.

    நயன்தாரா, பசுபதியிடமும் தனது கண்டனத்தைத் தெரிவித்த வாசு, 'இந்தப் படத்தின் நாயகன் யார், மற்றவர்களின் பங்கு என்ன என்பதைச் சொல்லிவிட்டுத்தானே உங்களையெல்லாம் ஒப்பந்தம் செய்தேன்..' என்றாராம்.

    உடனே மூவரும் இப்போது கவிதாலயா நிறுவனத்துக்கு தங்கள் விளக்கக் கடிதங்களை அனுப்பியுள்ளனர். பசுபதியும் நயன்தாராவும் தனிப்பட்ட முறையில் ரஜினியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்களாம்.

    அதன் பிறகு பத்திரிகைகளுக்கு மீனா, நயன்தாரா ஆகியோர் தனித்தனியாக அளித்த பேட்டி:

    மீனா:

    குசேலன் விழாவைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கில்லை. நான் கடந்த 27-ந் தேதி முதல் ஐதராபாத்தில், கரிகொண்ட தங்கம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதனால்தான் குசேலன் படவிழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

    நான் சூப்பர்ஸ்டாருடன் பல படங்களில் நடித்தவள். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் ஒருபோதும் எங்களைத் தவறாக நினைக்க மாட்டார். அவரிடம் நான் ஏற்கெனவே விஷயத்தைக் கூறிவிட்டேன். (உண்மையில் ஜூன் 30-ம் தேதியன்று காலைதான் மீனா ஐதராபாத்துக்குப் புறப்பட்டுப் போனார்!)

    இப்போதும் குசேலன் படத்தின் தெலுங்குப் பதிப்பு கதாநாயகுடு என்ற பெயரில் தயாராகி வருகிறது. அந்த படத்தின் டப்பிங் வேலைகள் ஐதராபாத்தில் நடைபெறுகின்றன. என் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு நானேதான் சொந்த குரலில் பேசி வருகிறேன்.

    நயன்தாரா:

    ஏகன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால்தான் என்னால் குசேலன் விழாவுக்கு வரமுடியவில்லை. படப்பிடிப்பு சென்னையில்தான் நடைபெற்றது என்றாலும், குசேலன் படவிழா நடைபெற்ற அன்று மாலை 4 மணிக்குதான் படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

    படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வரமுடியாத சூழ்நிலை என்பதாலேயே வரமுடியவில்லை. மற்றபடி வேறு எந்தக் காரணங்களும் இல்லை. இதுகுறித்து ரஜினி சாருக்கும் வாசு சாருக்கும் தகவல் தெரிவித்துவிட்டேன். என்றார் நயன்தாரா.

    பசுபதி:

    வெடிகுண்டு முருகேசன் படப்பிடிப்புக்காக மூணாறு போயிருந்ததால் குசேலன் விழாவுக்கு வரவில்லை என பசுபதி விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் மூணாறில் வெடிகுண்டு முருகேசன் படப்பிடிப்பே நடக்கவில்லை என படக்குழுவினர் தெரிவித்தனர்!

    ஆஹா... தொழில்முறை அரசியல்வாதிகளே தோற்றுவிடுவார்கள்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X