சிம்ரனுக்கு எதிராக தயாரிப்பாளர் போர்க்கொடி!

அருவா வேலு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் கே.வி.குணசேகரன். அப்படத்தில் நாசர் நாயகனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் சிம்ரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் குணசேகரன். இதுகுறித்து அவர் கூறுகையில், அருவா வேலு படத்தை தொடர்ந்து, ஐஸ்வர்யா என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டேன்.
6 வருடங்களுக்கு முன்பு இதற்கான வேலைகளில் ஈடுபட்டேன். அந்த படத்தில், நடிகை சிம்ரனின் தங்கை மறைந்த மோனலை ஹீரோயினாக போட தீர்மானித்தேன்.
அப்போது சிம்ரன், மோனல், அவர்களின் தாயார் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். சிம்ரன், அவருடைய தாயார் ஆகிய இரண்டு பேரின் முன்னிலையில், மோனலிடம் ரூ.75 ஆயிரம் கொடுத்தேன்.
2002-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தேன். இந்த நிலையில், 2002-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி, மோனல் தற்கொலை செய்துகொண்டார். சில நாட்கள் கழித்து நான் சிம்ரனை அணுகி, என் பணம் ரூ.75 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டேன்.
அவரும் தருவதாக கூறினார். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் அலைய விட்டார். கடந்த 6 வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். இதுவரை பணத்தை அவர் தரவில்லை.
எனவே சிம்ரன் நடிக்கும் புதிய படங்களின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவர் முன்பு மறியல் செய்வேன் என்று எச்சரித்துள்ளார் குணசேகரன்.
தயாரிப்பாளரின் இந்த மிரட்டலால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











