twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு புகார் எதிரொலி-சிங்கமுத்து குடும்பத்தோடு தலைமறைவு

    By Staff
    |

    Singamuthu
    நடிகர் வடிவேலு கொடுத்துள்ள புகாரின்பேரில் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து நடிகர் சிங்கமுத்து தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார்.

    அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர் முன்ஜாமீன் பெற முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அவரைக் கைது செய்து விட போலீஸ் தரப்பில் தீவிரம் காட்டப்படுகிறதாம்.

    சிங்கமுத்து தன்னிடம் ரூ. 7 கோடி அளவுக்கு நில மோசடி செய்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    மேலும் விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார். வடிவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் முதலில் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்தனர். தற்போது மோசடி வழக்கும் (420) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வடபழனி உதவி கமிஷனர் மனோகரன் நேரடி மேற்பார்வையில் நேற்றே விசாரணை தொடங்கியது. முதலில் சிங்கமுத்துவை போலீஸ் அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் ஆஜராகுமாறு கூறினர்.

    அதற்கு சிங்கமுத்து தான் நிச்சயம் விசாரணைக்காக நேரில் ஆஜராவதாக கூறினார். ஆனால் சொன்னபடி வரவில்லை. தற்போது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    இதையடுத்து போலீஸ் படை ராமாபுரம் அரசமர சந்திப்பு தெருவில் உள்ள சிங்கமுத்து வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. வீடும் பூட்டியிருந்து. குடும்பத்தோடு அவர் தலைமறைவாகி விட்டார்.

    நேற்று நள்ளிரவு வரை சிங்கமுத்துவுக்காக காத்திருந்த போலீஸார் தற்போது அவரை கைது செய்ய நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    வடிவேலு குழுவில் சிங்கமுத்து தவிர, போண்டா மணி, ஜெயமணி, சுப்புராஜ், சிவநாராயணன், விஜயகணேஷ் ஆகியோரும் முக்கிய துணை நடிகர்கள் ஆவர். சிங்கமுத்து மீதான புகார் குறித்து இவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

    அபாண்டமான புகார் - சிங்கமுத்து வக்கீல்

    இந்த நிலையில் சிங்கமுத்துவின் வக்கீல் அறிவழகன் கூறுகையில், சிங்கமுத்து மீது வடிவேலு கொடுத்திருக்கும் கொலை மிரட்டல் புகாரில் உண்மையில்லை. சிங்கமுத்து நிரபராதி. அவரை இந்த வழக்கில் சிக்க வைக்க வடிவேலு முயற்சிக்கிறார் என்றார்.

    தற்போது முன்ஜாமீன் கோரி சிங்கமுத்து கோர்ட்டை நாடவுள்ளதாக கூறப்படுகிறது.

    கோபத்தால் வடிவேலு புகாரா...?

    இதற்கிடையே, சிங்கமுத்துத் தரப்பினர் இன்னொரு புகாரையும் முன் வைக்கின்றனர். அதாவது சமீபத்தில் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

    இதையடுத்து வடிவேலு படங்களில் சிங்கமுத்து இடம் பெறவில்லை. இதனால் பிற காமெடி நடிகர்களுடன் அணி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் சிங்கமுத்து.

    இதனால் கோபமடைந்துதான் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு திரும்பியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

    மேலும், வடிவேலுதான் 19 சென்ட் நிலத்தை சிங்கமுத்துவிடமிருந்து மோசடியாக பறித்துக் கொண்டதாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    சிங்கமுத்து போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால்தான் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து தெளிவாகத் தெரியும் என்பதால் சிங்கமுத்துவிடம் நடக்கவுள்ள விசாரணைக்காக திரையுலகமே காத்திருக்கிறது.

    முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்:

    தலைமறைவாகி விட்ட சிங்கமுத்து இன்று முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் தன் மீது இரு வழக்குகளை விருகம்பாக்கம் போலீஸார் தொடர்ந்துள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் நான் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. நான் நிரபராதி. எனவே எனக்கு முன்ஜாமீ்ன் வழங்க வேண்டும் என்று சிங்கமுத்து கூறியுள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும்.

    பலர் வாழ்க்கையை கெடுத்தவர் வடிவேலு-சிங்கமுத்து

    இந் நிலையில் சிங்கமுத்து அளித்துள்ள ஒரு பேட்டியில்,

    நான் நிலமோசடி செய்யவில்லை. உண்மையில் வடிவேலுதான் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய 19 சென்ட் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். என்னைப் போலவே பல துணை நடிகர்களின் வாழ்க்கையைக் கெடுத்துள்ளார். அவர் குறித்த அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும் என்று பதில் புகார் கூறியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.

    தன் மீது வடிவேலு சுமத்தியிருக்கும் புகார்களை சிங்கமுத்து மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டி...

    என் மீது வடிவேலு சொல்லும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. நான் புறம் போக்கு நிலத்தையும், சுடுகாட்டு நிலத்தையும் அவருக்கு வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    எந்த நிலம் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்லட்டும். என் மீது தவறு இருந்தால் வடிவேலு வழக்கு போடட்டும். அப்போது உண்மை தெரியும். நிலத்தை விற்றது யார் வாங்கியது யார் என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும். ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் நான் எல்லா உண்மைகளையும் வெளியிட தயாராக இருக்கிறேன்.

    வடிவேலுதான் என்னிடம் நில மோசடி செய்துள்ளார். மேற்கு தாம்பரத்தில் எனக்கு சொந்தமாக 19 சென்ட் நிலம் இருந்தது. கிணறு, இலவச மின்சார இணைப்பும் அந்த நிலத்தில் இருந்தது. எனக்கிருந்த ஒரே சொத்து அதுதான். கஷ்டப்பட்டு உழைத்து அதை வாங்கினேன்.

    என் நிலத்துக்கு பின்னால் வடிவேலுவும் இடம் வாங்கினார். உன் நிலம் இருந்தால் தான் என் நிலத்துக்குள் நுழைய முடியும். எனவே அதை என்னிடம் விற்று விடு என்று கெஞ்சி கேட்டார். சேர்ந்து நடிக்கிறோமே என்று அவருக்கு கொடுக்க சம்மதித்தேன். குறைவான அட்வான்ஸ் தொகை கொடுத்து பத்திரப்பதிவு செய்து கொண்டார். மீதி பணத்தை பிறகு தருகிறேன் என்றார் தரவே இல்லை.

    வடிவேலுவுக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் பற்றி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். என் பணத்தை மோசடி செய்து விட்டு என்னை மோசக்காரன் என்பது போல் சித்தரிக்கிறார்.

    மனசாட்சி இல்லாதவர்...

    அவர் மனசாட்சி இல்லாதவர், நீலிக்கண்ணீர் வடிப்பவர், அவர் சொல்வதெல்லாம் பொய். வடிவேலு பற்றிய எல்லா ரகசியங்களும் எனக்கு தெரியும். பல துணை நடிகர்கள் வாழ்க்கையை கெடுத்துள்ளார்.

    உடன் நடிப்பவர்கள் அவரை விட சிறப்பாக நடித்தால் தாங்கிக் கொள்ள மாட்டார். தன்னோடு நடிப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

    போண்டா மணி கார் வாங்கியது பொறுக்கவில்லை..

    போண்டா மணி ஒரு கார் வாங்கியதை கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாததா‌ல் தன் குழுவில் இருந்து வடிவேலு வெளியேற்றி விட்டார்.

    இதனால் அந்த காரையே போண்டா மணி விற்று விட்டார். ஜெயமணி, சுப்புராஜ், சிவநாராயணா, விஜய கணேஷ் போன்ற துணை நடிகர்களையும் கஷ்டப்படுத்தினார்.

    என்னைப்பற்றி கேவலமாக பேசுவதையும் அவதூறு பரப்புவதையும் வடிவேலு நிறுத்திக் கொள்ள வேண்டும். 30 ஆண்டுகள் என் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால் வடிவேலு மீது நிறைய வழக்குகள் உள்ளன.

    வடிவேலு சுய ரூபத்தை மக்கள் தெரிந்து கொள்ளும் காலம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X