'வனிதாவை ஏன் கைது செய்யவில்லை?' - புறநகர் கமிஷனர் அலுவலகத்தில் விஜயகுமார் கேள்வி!!

சென்னையை அடுத்த மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி நடிகர் விஜயகுமார் ஒரு புகார் அளித்தார். அதில், "என் மகள் நடிகை வனிதா, மருமகன் ஆனந்தராஜ் ஆகியோர் என்னை தாக்கினார்கள். இதனால் எனது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகை வனிதாவின் கணவர் ஆனந்தராஜை கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி, நடிகை வனிதா, "நான் அளித்த புகாரின்பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக என் தந்தை விஜயகுமார் தந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?'' என்று போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் புகார் செய்தார். பின்னர் இந்த வழக்கு புறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது பற்றி உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கரன் விசாரணை நடத்தி வருகின்றார். கடந்த மாதம் 29-ந் தேதி நடிகை வனிதா, அவருடைய கணவர் ஆனந்தராஜுடன் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டை சந்தித்து இது குறித்துப் பேசினார்.
இதற்கிடையே ஹைதரபாத்தில் இருப்பதாக கூறப்பட்ட நடிகர் விஜயகுமார் நேற்று பகல் 12.30 மணிக்கு புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆகியோரைச் சந்தித்தார்.
"நான் அளித்த புகாரின்பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏன் வனிதாவை இன்னும் கைது செய்யவில்லை?'' என்று விஜயகுமார் கேட்டதாகவும், அதற்கு போலீசார், "இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது...'' என்று பதில் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இன்று மாலை நிருபர்களைச் சந்திப்பதாகவும் கூறியுள்ளார் விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











