twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நீயா நானா...?' ஒரு மல்லுக் கட்டு!

    By Staff
    |

    Neeya Naana
    விஜய் டிவியில் பிரபலமான டாக் ஷோவான 'நீயா நானா'வில் பங்கேற்ற தனக்கு பணம் தராமல் இழுத்தடிப்பதாக விஜய் டிவி நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

    இது தொடர்பாக ஆனந்த விகடன் வார இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி நிர்வாகம் 'நீயா நானா' தொடருக்காக பிரபலங்களையும் மாணவிகளையும் நடு ராத்திரி வரை காக்க வைத்தும், பணம் தராமலும் இழுத்தடித்து நோகடிப்பதாக அந்தக் கட்டுரையில் சாரு நிவேதிதா குற்றம் சாட்டியுள்ளார்.

    பதிலுக்கு, இம்மாதிரி நிகழ்ச்சிகளில் யாருக்கும் பணம் தருவதில்லை என்றும், ஆனால் சாருவுக்கு அவர் கலந்து கொண்ட மொத்த நிகழ்ச்சிக்கும் சேர்த்து ஒரு தொகையை ஓரிரு நாட்களில் செட்டில் செய்துவிடுவதாகவும் விஜய் டிவி நிர்வாகி ஆண்டனி பதில் தெரிவித்துள்ளார்.

    விகடனில் வெளியாகியுள்ள சாருவின் கட்டுரை இதோ:

    'என் சக எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரைப் போல் எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை உண்டு. ஆனால், கதை வசனம் எழுதி அல்ல... நடிகனாக. சில இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். வசந்தபாலன் நல்ல முடிவு சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்குள் தொலைக்காட்சியிலும் சற்றே தலை காட்டலாம் என்று 'டாக் ஷோ'க்களில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் மட்டும் ஒப்புக்கொள்வது உண்டு.

    இப்படியாக விஜய் டி.வியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் பல முறை விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறேன். பொதுவாக, நான் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது இல்லை என்றாலும், சமூக அக்கறையுடன் கூடிய விஷயங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதால் 'நீயா நானா' நிகழ்ச்சியைப் பிடிக்கும்.

    ஆனாலும், அதில் கலந்து கொள்வதில் எனக்கு ஒரு பிரச்சனை இருந்தது. பிரதான விருந்தினராக வரவழைத்துவிட்டு, கடைசியில் காசு எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் 'இலவச சேவையே' செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.

    ஆனால், ஒருமுறை 'நீயா நானா'வில் கலந்துகொள்ள அழைத்தபோது, அதே தேதியில் கேரளாவின் கொச்சியிலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருந்தேன். (தமிழ்நாட்டைவிட அடியேனை கேரள மக்களுக்கு அதிகம் தெரியும்). அதனால் என் இயலாமையை 'நீயா நானா' குழுவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் கொச்சிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கே தெரியும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு அவர்களால் செலவு செய்ய முடிகிறது என்று!.

    இன்னொரு சமயம், விஜய் டி.வியின் இன்னொரு நிகழ்ச்சிக்காக நளினி ஜமீலாவுடன் நானும் கலந்து கொண்டேன். அதில் கலந்து கொள்ள நளினி ஜமீலாவுக்கும், அவருடைய உதவியாளருக்கும் திருவனந்தபுரத்திலிருந்து வரவும் திரும்பவும் விமான டிக்கெட், அவர்கள் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க ஹோட்டல் செலவு, விலை உயர்ந்த பட்டுப் புடவை என்று மொத்தம் 30,000 ரூபாய் செலவு செய்தார்கள். ஆனால் எனக்கு என்ன என்று கேட்டபோது, 'நாளை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்!' என்றார்கள்.

    நாளை... நாளை... மீடியேட்டர் வேலை!

    ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். விஜய் டி.விக்கும் எனக்கும் இடையே மீடியேட்டராகச் செயல்பட்டார் ஒரு நபர். அவர் சொன்னபடி அந்த 'நாளை' என்ற நாள் இன்னும் வரவே இல்லை. நானும் ஒரு போன் செய்து பார்த்தேன். 'இதோ ஒன் அவர்ல அனுப்பிவைக்கிறேன் சார்!' என்றார் எந்தப் பதற்றமும் இல்லாமல். ஆனால், அந்த 'ஒன் அவரு'ம் இன்னும் வரவில்லை. சரி, போ என்று நானும் விட்டுவிட்டேன்.

    அதற்குப் பிறகும் 'நீயா நானா'வுக்காக போன் வரும். நானும் போவேன்... வருவேன். ஆனால், பைசா மட்டும் கிடையாது. 'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பி வைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது.

    சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத்தைத் தடுக்கிறது. இதற்கிடையில் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூளையாகச் செயல்படும் ஆண்டனியும் எனக்கு நண்பராகிவிட்டார். அவர்தான் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர்.

    இந் நிலையில் ஜூலை 17ம் தேதி 'நீயா நானா' சூட்டிங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார் அந்த மீடியேட்டர். இரண்டு காரணங்களைச் சொல்லி, அழைப்பை மறுத்தேன். ஒன்று, இலவச சேவை. அதையும் பகலில் செய்தால் பரவாயில்லை. இரவு 12 மணிக்கு மேல்தான் படப்பிடிப்பை ஆரம்பித்து இரண்டு மணிக்குத்தான் முடிப்பார்கள். அது வேறு பெரும் தொல்லையாக இருந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் பலர் இளம் பெண்கள். கல்லூரி மாணவிகள். அவர்களை எல்லாம் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கடைசியாக என் வீடு வந்து சேர மூன்று மணிக்கு மேல் ஆகி விடும்.

    'இந்த முறை அப்படி நடக்காது. 10 மணிக்கே சூட்டிங் ஆரம்பம். 12 மணிக்கு அனுப்பிவிடுவேன்!' மீடியேட்டரின் வாக்குறுதி. 'பணம்?'

    'எப்போதும் கொடுப்பது போல் நிகழ்ச்சி முடிந்ததும் கை மேல் பணம்!'

    'என்னது... எப்போதும் கொடுப்பது போலா? எப்போதய்யா அப்படிக் கொடுத்தீர்கள்?'

    'ஐயோ சார்! நீங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளவில்லையா?. இந்த முறை அப்படி நடக்காது. நிகழ்ச்சி முடிந்ததும் கொடுத்து விடுவார்கள்! எட்டு மணிக்கே வண்டி வந்து விடும். கூடவே, மேடத்தையும் அழைத்து வாருங்கள்' என்றார். காரணம், நிகழ்ச்சி அப்படி. திருமணம், மறுமணம் என்பது தலைப்பு. நானும் அவந்திகாவும் மறுமணம் செய்துகொண்டவர்கள்.

    'போய்யா... நீயும் உன் ஷூட்டிங்கும்!'

    சொன்ன நேரத்துக்கு வண்டி வரவில்லை. அவந்திகாவுக்கு டி.வி. என்றாலே அலர்ஜி. 'அடப் போய்யா, நீயும் உன் டி.வியும்!' என்று சொல்லிவிட்டு அவள் படுத்துத் தூங்கிவிட்டாள். ஒருவழியாக வண்டி வந்து சேர்ந்தது. '12 மணிக்கு மேலதான் சார் சூட்டிங். அதனாலதான் மெதுவா கிளம்பி வந்தேன்!' என்றார் டிரைவர்.

    போய்ப் பார்த்தால் கோபிநாத் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். பாவம், காலையிலிருந்து இரண்டு சூட்டிங்கில் கலந்து கொண்ட களைப்பு!!. 'நீயா நானா' சூட்டிங் ஆரம்பித்தபோது மணி நடுநிசி ஒன்றரை. பாவம், அத்தனை பார்வையாளர்களும் 10 மணியில் இருந்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சூட்டிங் முடியும்போது சரியாக அதிகாலை 3.45 மணி. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது சுமார் நான்கரை மணி. தூக்கக் கலக்கத்தில் பணம் பற்றிக் கேட்கவில்லை. மறுநாள் கேட்டபோது அதே ஸ்டீரியோ டைப் பதில். 'நாளை கொடுத்து அனுப்புகிறேன்!' ஆனால், இந்த முறை நான் முன்பு போல் சும்மா இல்லை. மறுநாளும் மறுநாளும் போன் செய்தேன். இப்போது மீடியேட்டர் என் போனை எடுப்பதில்லை. வேறு போனிலிருந்து பேசினால் வைத்துவிடுகிறார். அவந்திகாவை விட்டுப் பேசச் சொன்னால் 'அவரோட மச்சான் பேசுகிறேன், மாமா பேசுகிறேன்' என்கிறார்.

    இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு என் மனதில் எழும் கேள்விகள்:

    பிரதான கெஸ்டாக ஒருவரை வரவழைத்துவிட்டு இப்படித்தான் நடத்துவீர்களா?

    காலை நான்கு மணி வரை ஒருவரிடம் வேலை வாங்கிவிட்டு, அதற்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டாமா? இதுதான் சமுதாய மறுமலர்ச்சியைப் பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அடையாளமா?

    இப்படி நடுநிசி வரை இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சூட்டிங்கை முன்வைத்து காக்கச் செய்வது சித்ரவதை இல்லையா?, என்று அந்தக் கட்டுரையில் விஜய் டிவியை கடுமையாக வாரியுள்ளார் சாரு.

    பணம் தருவது மரபல்ல..விஜய் டிவி விளக்கம்:

    இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விஜய் டிவி சார்பில் நீயான நானா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆன்டனி அளித்துள்ள விளக்கத்தையும் விகடன் வெளியிட்டுள்ளது. அந்த விளக்கம்:

    "பணம் கொடுத்துப் பேச வைத்தால் செட் செய்த நாடகம் போன்றாகிவிடும் என்பதால், எங்களுடைய டாக் ஷோக்களில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் நாங்கள் பணம் தருவது இல்லை. என்.டி.டி.வி. உள்ளிட்ட சேனல்களில்கூட அந்த மரபு இல்லை.

    இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களை அழைத்துவரும் பொறுப்பை சுந்தர்ராஜன் என்ற நபரிடம் ஒப்படைத்து இருந்தோம். அவர் எங்கள் ஊழியர் கிடையாது. பணப் பட்டுவாடா அவர் மூலமாகவே நடந்தது. இந்த விவகாரத்தில் நான் சாருவையே சப்போர்ட் செய்வேன். அவருடைய எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

    ஆனால், அவரைப் போன்ற சிறு பத்திரிகையாளர்கள், நல்ல எழுத்தாளர்களின் கருத்துக்கள் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் நிகழ்ச்சியில் அவர்களைப் போன்றவர்களுக்குத் தொடர்ந்து ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறோம்.

    இரண்டொரு நாளில் மொத்தப் பணமும்...

    நளினி ஜமீலா கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் 35 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட நளினிக்கு என் சொந்தப் பணத்தில் இருந்துதான் அந்தச் செலவுகளைச் செய்தேன்.

    படப்பிடிப்பு நடக்கும் நேரம், காலம் குறித்து சாருவிடம் சரிவரத் தெரிவிக்காததும் அந்த மீடியேட்டரின் தவறே. இனி, எங்கள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்களை அழைத்து வரும் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளேன். எது எப்படியோ நடந்த சம்பவங்கள் வருத்தத்தையே தருகின்றன!'' என்கிறார் ஆண்டனி வருத்தம் தோய்ந்த குரலில்.

    ஆண்டனியிடம் நாம் பேசிய சிறிது நேரத்துக்குப் பிறகு நம்மைத் தொடர்புகொண்டார் சாரு நிவேதிதா.

    'இப்போதான் ஆண்டனி என்கிட்ட பேசினார். நிகழ்ந்த தவறுகளுக்கும் சிரமங்களுக்கும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இதுவரை வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு, வழங்கப்படாமல் இருந்த தொகையையும் இரண்டொரு நாட்களில் சேர்ப்பிக்கப்படும்னு சொன்னார். அந்த மீடியேட்டருடன் இனி தொடர்புகொள்ள வேண்டாம்னும் சொன்னார்!.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X