முதல்வருக்கு இயக்குநர்கள் வேண்டுகோள்

ஆங்கிலப் புத்தாண்டுக்கு இணையாக தமிழ்ப் புத்தாண்டையும் சர்வதேசத் தரத்துடன் கொண்டாட வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதியை, சங்கத்தின் பொதுச்செயலாளர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, துணைத் தலைவர் விக்ரமன், இணைச்செயலாளர்கள் என்.லிங்குசாமி, அமீர், டி.கே.சண்முகசுந்தரம், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஈ.ராம்தாஸ், எழில், மாதேஷ், பேரரசு, இணை இயக்குனர்கள் ஆர்.சிபி, ராஜா கார்த்திக் ஆகியோர் சந்தித்தார்கள்.
அப்போது, வருகிற ஜுன் மாதம் கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பங்கு பெறவும், தமிழ் மொழியின் தொன்மையையும், சிறப்பையும் விளக்கும் விதமாக இயக்குனர்கள் பங்குபெறும் வரலாற்று நாடகங்களை நடத்தவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்கள் கோரிக்கைக்கு நிச்சயம் அனுமதி உண்டு என்று முதல்வர் பதிலளித்துள்ளார். மேலும், ஆங்கில புத்தாண்டு மற்றும் சீனப் புத்தாண்டு போல், தமிழ் புத்தாண்டு மிக சிறப்பாக, கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்கிற நோக்கில் வருகிற 2010 தமிழ் புத்தாண்டில், சென்னை மெரினா கடற்கரையில் உலக தரத்துடன் வானவேடிக்கைகள் நடத்துவதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதனை முதல்வருக்குத் தெரிவித்த இயக்குநர்கள், இந்த ஆண்டு நடக்கும் வாண வேடிக்கைத் திருவிழாவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











