கடவுளும் நானும்-கருணாநிதி பேச்சு

By Staff

Karunaninthi
கடவுளை நான் எற்கிறேனா இல்லையா என்பதல்ல பிரச்சினை. கடவுள் என்னை ஏற்கும்படி நடந்து கொள்கிறாரா என்பதே இப்போதைய பிரச்சினை. எனவே கடவுள் ஏற்கும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னையில் நடந்த புனித தோமையார் திரைப்பட தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையாரின் வாழ்க்கை வரலாறு பிரமாண்டமாக, ஹாலிவுட் முறையில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. சென்னை மயிலை உயர்மறை மாவட்டம் சார்பில் ரூ.50 கோடி செலவில் அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை-மைலாப்பூரில் உள்ள சாந்தோம் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் கருணாநிதியிடம் இந்த திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை புனித தோமையார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி வழங்கினார்.

கருணாநிதி, அதனை சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, கேரளா திருச்சபை வரலாற்று பேராசிரியர் அருட்தந்தை சேவியர் கூடப்புழா ஆகியோரிடம் வழங்கினார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில்,

இந்த விழா ஒரு மாமனிதர் இயேசு பிரானுடைய சிறப்பியல்புகளை வரலாற்றுத் திருப்பங்களை, அவர் புரிந்த தியாகங்களை, அவர் ஆற்றிய தொண்டினை, அரும்பணியினை, மக்கள்பால் அவர் கொண்டிருந்த பேரன்பை விளக்குவதற்காக அதை நிழல்படமாக, பேசும்படமாக, வண்ணப்படமாக, எண்ணக் கருவூலமாக வழங்குவதற்காக தொடங்கப்படுகின்ற விழா.

இந்த விழாவிலே என்னை அழைத்திருப்பதைப் பற்றி நம்முடைய லாரன்ஸ் பயஸ் குறிப்பிட்டார். இவரை அழைக்கிறீர்களே, இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஆயிற்றே, இவரை அழைக்கலாமா என்று சில பேர் சந்தேகப்பட்டதாகச் சொல்லிவிட்டு, அதற்குரிய விடையையும், விளக்கத்தையும் அவரே இங்கே அளித்தார்.

இது சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விழா.

இதற்கு முன்பு இப்படியொரு விழாவில், மைலாப்பூரில் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துக்களின் குருநாதர்கள், இந்துக்களின் மரியாதைக்குரியவர்கள், அடிகளார் போன்றவர்கள், சைவ சிரேஷ்டர்கள், வைணவ பெரியோர்கள், கிருபானந்த வாரியார்-இவர்கள் எல்லாம் இணைந்து நடத்திய ஒரு விழாவில், என்னை வாரியாரும், தர்மபுரம் ஆதினகர்த்தரும், குன்றக்குடி அடிகளாரும் மற்றும் சைவ, வைணவப் பெரியோர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.

அதிலே என்னை வாழ்த்தியவர்களில் ஒரு பெரியவர், கடவுளை கருணாநிதி ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், நாம் அவருக்கு இத்தகைய புகழுரையை, வாழ்த்துரையை, பாராட்டுரையை வழங்குவது சரியா என்று சிலர் கேட்கக்கூடும் என்று சொல்லிவிட்டு, அவரே அதற்கு விளக்கமும் அளித்தார், நம்முடைய லாரன்ஸ் பயஸ் போல.

அந்த விழாவிலே நான் இறுதியாக உரையாற்றும்போது, கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறாரா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புவதாக சொன்னார்கள். பிரச்சினை அது அல்ல.

கருணாநிதி சாதாரணம். உங்கள் கோணத்தில் பார்த்தால் கடவுள், கருணாநிதியைவிட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு பெரியவர், அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சாதாரண கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னாலே அது கடவுளுக்கு அவமானம்.

எனவே, கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் முக்கியமே தவிர நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேனா அல்லவா என்பதல்ல பிரச்சினை என்று அன்றைக்கு விளக்கம் அளித்தேன்.

ஆகவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.

ஏழையைக் கண்டால் இரக்கம் காட்டு, நோயுற்றவனைக் கண்டால் பரிதாப்படு, உதவிகளைச் செய், நலிந்தோருக்கு நன்மைகளைக் குவித்திடு-இப்படி யார் யார் பாதிக்கப்படுகின்ற மக்கள் இருக்கின்றார்களோ, அவர்களிடத்திலே பரிவு காட்டுவதுதான் கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதற்காக செய்கின்ற காரியங்கள்.

அதை விட்டுவிட்டு, ஒரு ஏழை அய்யா சாமி என்று கையேந்தும்போது- போடா முட்டாளே என்று அவனை தள்ளிவிட்டு நாம் கடவுளை கும்பிடுவதிலே எந்தவிதமான பயனும் இல்லை. அந்த கைகளை கடவுள் மன்னிக்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மத போதனை செய்தார் என்பதற்காக புனித தோமையார், என்னைக் கவர்ந்துவிட்டார் என்று மாத்திரம் நான் சொல்லமாட்டேன். அந்த மத போதனையை இந்தியத் திருநாட்டில் தன்னுடைய தலைக்கே ஆபத்து வந்தாலும்கூட, தன்னுடைய உயிரே போகக்கூடிய அளவிற்கு தியாகம் செய்யக்கூடிய சூழ்நிலை வந்தாலும்கூட, தன்னுடைய உயிரைக்கொடுத்து, தன் கொள்கைக்காக வாழ்ந்தார் என்ற அந்த ஒன்றுதான் அவர் ஆற்றிய எல்லா தொண்டுகளையும்விட தலையாயத் தொண்டாக இருந்து என்னைக் கவர்ந்தது.

இந்த காரணத்தால், நான் இந்தக் கதையை படமாக எடுக்கிறார்களே, பெரிய சம்பவங்களில் என்ன வரப்போகிறது என்று புனித தோமையாருடைய கதையை நான் படித்தபோது, அவர் கடைசியாக கொடியவன் ஒருவனால் கொல்லப்பட்டார். சதிக்கு ஆளானார், சதி செய்து கொன்றார்கள், சூழ்ச்சியால் அவரைக் கொன்றார்கள்.

இந்த சென்னை மாநகரத்திலே இருந்து இந்த வட்டாரத்தில் எல்லாம் கிறித்துவ மத போதனையைச் செய்து கொண்டிருந்த அந்த ஆற்றலாளர், அந்த அன்புக்குரியவர் இப்படிக் கொல்லப்பட்டார் என்ற அந்த ஒரு காட்சி மாத்திரமே போதும்-இந்தப் படம் குறித்த காரணத்துக்கு படத்தின் வெற்றிக்கு.

தியாக உருவமாக திகழ்ந்த மிகப் பெரும் மனிதர், தோமையார் எனும் பெயருக்குரிய அந்தப் புனிதர் மறைந்த நிகழ்ச்சி நம் மனதைவிட்டு அகலாத நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் அந்த நிகழ்ச்சியில் அவரை வீழ்த்தியவர்களுடைய பெயர் நமக்குத் தெரியாது. வீழ்த்தப்பட்டவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இதுதான் வரலாறு, இதுதான் சரித்திரம்.

பாரி மன்னனை அவனுடைய வள்ளல் தன்மையை அவன் ஆற்றிய அரும் கொடைகளை எல்லாம் நாம் அறிவோம். அந்தப் பாரி மன்னன், சோழர், சேரர், பாண்டியர் ஆகியவர்களின் படையெடுப்பால் வீழ்த்தப்பட்டான். பாரி மன்னன் போர்க்களத்திலே உயிர்நீத்தது நமக்குத் தெரிகிறது. வீழ்ந்தவனின் பெயர் நமக்கு ஞாபகம் இருக்கிறது. அவனை வீழ்த்திய சேர மன்னனை, நமக்கு தெரியுமா என்றால் தெரியாது.

நிலைக்கும் பெயர் இது, நிலைக்காத பெயர் எது என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே, இந்த கிறிஸ்தவ சமயத்தின் வரலாற்றில் தோமையாரின் புகழ், பெயர் நிலைத்த பெயர், நிலைக்கும் பெயர், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய பெயர். அதைத்தான் படமாக எடுக்க திரைக்காவியமாக வடிக்க நம்முடைய நண்பர்கள் இந்த அமைப்பின் மூலமாக இன்றைக்கு முயற்சியை தொடங்குகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெல்க, வாழ்க என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X