twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    128 அடி பாய்வார் பாலா - பாலுமகேந்திரா

    By Staff
    |

    Balu Mahendra
    முதல் படத்திலேயே 16 அடி பாய்ந்தார் பாலா. அடுத்த படத்தில் 32 அடி, அதற்கு அடுத்த படத்தில் 64 அடி என பாய்ந்தார். நான் கடவுள் படத்தில் 128 அடிக்கும் மேலாக அவர் பாய்வார் என பாலுமகேந்திரா புகழாரம் சூட்டியுள்ளார்.

    புத்தாண்டின் முதல்நாள் நான் கடவுள் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

    ஆர்யா, பூஜா நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் கேசட், டிரெய்லர் சிடி வெளியீட்டு விழா சென்னையில் புத்தாண்டு தினத்தில் நடந்தது.

    கேசட், சிடியை தயாரிப்பாளர்கள் ராம நாராயணன், பிரமிட் சாமிநாதன் வெளியிட விக்ரம், சூர்யா பெற்றுக்கொண்டனர்.

    காலை 9 மணிக்கெல்லாம் அரங்கம் நிரம்பி வழிந்தது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் பார்க்கும் ஆர்வத்தில் விழாவுக்கு வந்திருந்ததாக விஐபிக்கள் பலரும் குறிப்பிட்டனர்.

    இயக்குநர் பாலா மிகவும் முரட்டுத்தனமான மனிதர், முன்கோபக்கார் என்று எல்லாரும் என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் உண்மையில் அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி என்று புகழாரம் சூட்டினார் நான் கடவுள் பட நாயகி பூஜா.

    ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்ட பூஜா... "எனக்கு பாலா சார் பத்தி பேச வார்த்தைகள் இல்லே... பாலா சார் ஐ லவ் யூ..." என்றார்.

    விழாவில் சில விஐபிக்கள் பேசியதிலிருந்து...

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் - வாலி

    பாலாவின் நான் கடவுள் படம் லேட்டாவதாகச் சிலர் சொல்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக் மாதிரி சொல்லணும்னா, நான் கடவுள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்தான்.

    பாலா மிகச் சிறந்த படைப்பாளி. பாலா கொஞ்சமா பேசுவார். ஆனா அவர் படத்தைப் பத்தி எல்லாரும் பேசுவாங்க. அதான் பாலா...

    'இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜா'

    இந்தி இசையமைப்பாளர் உத்தம்சிங்: இந்தியாவின் இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இந்த மேதையோடு 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன் நான். இவரைப் போன்ற ஒரு மேதையைப் பார்த்ததில்லை. இந்தியாவின் மிகச்சிறந்த இசையை அவரால் மட்டுமே தரமுடியும்.

    இந்தப் படத்தில் சில வட இந்திய காட்சிகளுக்கான இசைக் கோர்வையை மட்டும் என்னை உருவாக்கித் தரச் சொன்னார். அவருடன் பணியாற்றுவது என் அதிர்ஷ்டம், என்றார்.

    மணிரத்னம்: பாலாவின் ரசிகனாக விழாவுக்கு வந்திருக்கிறேன். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா வரிசையில் பாலாவை வைத்துப் பார்க்கிறேன். அவரை பார்த்து நிறைய புது இயக்குனர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

    இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது. தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு செல்லும் படம் இது.

    விக்ரம்: நானும் சூர்யாவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதற்கு காரணம் பாலாதான். நந்தாவுக்கு பின் சூர்யாவின் சினிமா பாதை மாறியது. வாரணம் ஆயிரம் படத்திலும் நிறைய வித்தியாசங்களை காட்டியிருக்கிறார்.

    அந்தப் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. படத்தின் சின்னச் சின்ன கிளிப்பிங்குகளே படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டுள்ளன.

    பாலா ஒரு நண்பர், சகோதரர் என்பதையும் தாண்டி, என்னுடைய குருவுக்கு சமமானவர்.

    அவரது அடுத்த படம் உருவாக ஐந்து வருடங்கள் ஆகலாம். ஆனாலும் அவரது படத்தில் மீண்டும் நடிக்க ஆவலோடு இருக்கிறேன்.

    சூர்யா: நான் கடவுள் உருவாக தாமதமாகிவிட்டது என சொல்கிறார்கள். பாலா அண்ணன் அடிக்கடி சொல்வது போல, தீபாவளி, பொங்கலுக்காக தயாரிக்க சினிமா ஒன்றும் பட்டாசு, இனிப்பு அல்ல. இது பாலாவின் படம். அந்தப் படம் எப்போது வந்தாலும் பண்டிகைதான்.

    சினிமாவை நான் நேசிக்க, நல்ல படங்களை தேர்வு செய்ய பாலாதான் காரணம். அவரது நந்தா படத்தில் நடிக்காமல் போயிருந்தால் எனது சினிமா வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

    சேது படம் பார்த்தபோது இந்த மாதிரி வேடத்தில் நடிக்க வேண்டும் என விக்ரமை பார்த்து தோன்றியது. அவரை பார்த்துதான் இப்போதும் வித்தியாச வேடங்களை செய்ய வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறேன். அதற்குள் ஆர்யா வந்துவிட்டார். இனி அவரையும் தாண்டி ஓட முயற்சிக்க வேண்டும்.

    நான் கடவுளில் நான் நடித்திருந்தால் ஆர்யா அளவுக்கு நேர்மையாக செய்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.

    ஆர்யா: மூன்று ஆண்டுகள் பாலாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த கேரக்டருக்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கு பாலாதான் காரணம்.

    பாலுமகேந்திரா: என் மூத்த மகன் பாலாவை நினைத்து பெருமிதமடைகிறேன். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். ஆனால் பாலா முதல் படத்தில் 16 அடி, அடுத்த படத்தில் 32 அடி, அடுத்த படத்தில் 64 அடி பாய்ந்தவர். இப்போது நான் கடவுளில் நிச்சயம் 128 அடி அல்ல, அதைவிட பல மடங்கு அதிக அடிகள் பாய்வார், பல விருதுகளை அள்ளி வருவார், தமிழ் சினிமாவை உலகமெங்கும் பேச வைப்பார், என்றார்.

    விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் பாலா, கடைசி வரை மேடையில் மற்றவர்களுடன் அமர மறுத்துவிட்டார்.

    கடைசியில் விக்ரமும், சூர்யாவும் அவரை வற்புறுத்தி அழைத்து வந்தனர். ஆனால் 'பார்ட்டி' ஓரே வரிதான் பேசினார்:

    'இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்த உங்க எல்லாத்துக்கும் நன்றி!'

    பாலாவின் குரு இளையராஜா அவரைவிட ஒரு படி மேல். விழாவுக்கு வரவே இல்லை!!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X