twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண் சிங்கத்தை வெற்றிப் படமாக்குமாறு அழகிரி 'உத்தரவு'!

    By Chakra
    |

    Uday Kiran and Meera Jasmine
    சென்னை: பெண் சிங்கம் படத்தை வெற்றிப் படமாக்குமாறு திமுகவின் அனைத்து தென் மாவட்ட நிர்வாகிகளுக்கும் மத்திய அமைச்சர் முக அழகிரி வேண்டுகோள் கலந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனத்தில் உருவான பெண்சிங்கம் படத்தில், உதய்கிரண் கதாநாயகனாகவும் மீரா ஜாஸ்மின் நாயகியாகவும் நடித்துள்ளனர். பாலி ஸ்ரீரங்கம் இயக்கியுள்ளார். ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன் தயாரித்துள்ளார்.

    கருணாநிதி பிறந்த நாளையொட்டி இந்தப் படம் தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று ரிலீஸ் ஆனது.

    பெரிய நடிகர்களின் படங்களுக்கு செய்யப்படுவதுபோல் தியேட்டர்கள் முன்பு தி.மு.க.வினர் வாழை தோரணங்கள் கட்டி இருந்தனர். கருணாநிதி கட் அவுட்களும் வைத்திருந்தனர். முதல் காட்சி திரையிடப்பட்ட போது தியேட்டர்களின் வாசலில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள்.

    இதனை வெற்றிப் படமாக்க கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி ஆர்வம் காட்டி வருகிறார்.

    இது தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, "தென் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

    பொதுமக்களையும், ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அழைத்து சென்று கலைஞர் கதை வசனத்தில் உருவான பெண் சிங்கம் திரைப்படத்தை காண்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும்" என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

    முதல்வரும், தந்தையுமான கருணாநிதிக்கு 87-வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டுநேற்று மதுரை சென்றார் அழகிரி. பின்னர் பெண் சிங்கம் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பொதுமக்களிடம் பேசி, கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

    தென் மாவட்டங்களில் பெண் சிங்கம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கும் இன்று முதல் செல்லத் திட்டமிட்டுள்ளார். மு.க. அழகிரியின் வேண்டுகோளை ஏற்று பெண் சிங்கம் படத்தை வெற்றிப் படமாக்கும் முயற்சியில் தி.மு.க.வினர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X