நான் செத்தாவது காங்கிரஸை இந்த மண்ணிலிருந்து விரட்டுவேன்! - சீமான்

மேலைக்கடலில் ஈழக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் சீமான் பேசியதாவது:
இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை... ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது.
காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே... யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல... என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்... புலிகள்தான்!
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.
பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அனுப்பியுள்ளார்கள். இத்தாலி சோனியாவை பாரதத்தின் அன்னை என்று அழைக்கும்போது, என் சொந்த ரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்.
சர்வாதிகாரி, சகோதரயுத்தம் செய்தவன், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறான், தன் புகழை வளர்க்க சண்டை போடுகிறான்.... இப்படி அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள்... பொய் பழிகள். ஆனால் அத்தனையையும் பிரபாகரன் எனும் பெரு நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் என்பதை இவர்களுக்கு காலம் புரியவைக்கும்.
நான் உணர்ச்சிவசப்படுவதாகக் கூறினார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கு, வசப்பட்டு பேசறேன். உணர்ச்சியில்லாதவங்க சும்மா இருக்காங்க.
பிரபாகரன் நாடுகேட்டது அவருக்காகவா... உனக்கும் எனக்கும்...ஒவ்வொரு தமிழனுக்கும். இறையாண்மை பற்றிப் பேசுகிறோமே... தவிச்ச வாய்க்கு பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி தருகிறானா இந்த நாட்டிலே... எங்கே இருக்கிறது உனக்கான உரிமை?
தமிழகக் கடலில் மீன் பிடிக்க தமிழனுக்கு உரிமை இல்லை. எங்கள் மீனவனுக்கு சொந்தமான கச்சத்தீவை யாரைக் கேட்டு தாரைவார்த்துக் கொடுத்தீர்கள்? 430 தமிழ் மீனவனை சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்களர்கள். அதை ஏன் என்று கேட்க நாதியில்லை... அப்புறம் எங்கே வந்தது இறையாண்மை? எனக்கு இறைவனுமில்லை... இறையாண்மையுமில்லை.
தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்.... சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க...?
அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல் என்பதை நம்புபவர்கள் நாங்கள். 'மதுக்கடையிலும், திரையரங்க வாசல்களிலும் கூட்டம் கூட்டமாய் நின்று உணர்வை இழந்து கொண்டிருக்கும் என் சகோதரர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையே' என என்னிடம் சில தினங்களுக்கு முன் வருத்தப்பட்டுக் கூறினார் அண்ணன் பிரபாகரன்.
கடலுக்கு அப்பால் உள்ள தமிழனும் சாகிறான்... இந்தப் பக்கம் உள்ள தமிழனும் சாகிறான். நாதியத்துப் போன கூட்டமாகிவிட்டோமே என்ற ஆற்றாமை என்னை தூங்கக் விடாமல் கொல்லுகிறது.
திபெத்திய தலாய்லாமாவுக்கு ஒரு நியாயம், ஈழத்துப் பிரபாகரனுக்கு ஒரு நியாயமா... பங்களாதேஷைப் பிரித்துக் கொடுக்க ஒரு நியாயம், தனி ஈழம் உருவாவதைத் தடுக்க ஒரு நியாயமா... இந்த அநியாயத்தை யார் கேட்பது என் இந்தியாவில்.
10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரைநூற்றாண்டுப் போர்... லட்சத்தில் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம்... நண்பர்களே... பிரபாகரன் வேறு நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. காலகாலமாக, நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் பண்டார வன்னியன் காலத்திலிருந்து அரசாண்டு வந்த தன் சொந்த மண்ணை அந்நியர்களிடம் இழந்துவிடாமலிருக்கப் போராடுகிறான்.
இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது... ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், ராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து... என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ்.
அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும்... நான் செத்தாவது இந்தக காங்கிரஸை விரட்டியடிப்பேன்... என்றார் சீமான்.
இந்த விழாவில் வழக்கறிஞர் அருள் மொழி பேசினார். "புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஈழத்திலே தனக்கொரு அண்ணன், தம்பி, மாமன் இருப்பதாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. அந்த அண்ணன், தம்பி, மாமன் யார் தெரியுமா... பிரபாகரன்! அவர் தனி மனிதனல்ல... இந்தப் பூமியெங்கும் பரந்து விரிந்துள்ள தமிழர்களின் உயிரான உறவு அவர்... இறையாண்மை பற்றி யாரும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை!" என்றார்.
இயக்குநர்கள் பாலு மகேந்திரா, கேஎஸ் அதியமான், வழக்கறிஞர் பால் கனகராஜ், ஓவியர் புகழேந்தி ஆகியோரும் பேசினர்.
பத்திரிகையாளர் சுந்தர புத்தன் வரவேற்றுப் பேசினார். 'மேலைக்கடலில் ஈழக்காற்று' புத்தகத்தை எழுதிய கவியரசு நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











