3 மாதம்..21 படங்கள்..ரூ.50 கோடி நஷ்டம்!-சிவசக்தி பாண்டியன்

மூணார் மலைவாழிடத்துக்கு கணவனுடன் தேன்நிலவுக்கு சென்றபோது புது மணப்பெண், கள்ளக் காதலனை வைத்து கணவனை கொலை செய்த உண்மை சம்பவம், 'மூணார்' என்ற பெயரில் படமாகிறது.
தென்னக திரைக்கூடம் எனும் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, பிலிம்சேம்பர் திரையரங்கில் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் பாடல்களை வெளியிட, மதர்லாண்ட் பிக்சர்ஸ் அதிபர் கோவைதம்பி பெற்றுக் கொண்டார்.
விழாவில், சிவசக்தி பாண்டியன் பேசியதாவது:
'இன்றைக்கு தாங்கள் நடித்த ஒரு பட விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பதை பேஷனாகக் கருதுகிறார்கள் நடிகர் நடிகைகள்.
கேட்டால், டெல்லியில் இருக்கிறேன்...மும்பையில் இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள்.
ரூ.50 கோடி நஷ்டம்!
ஒரு படத்தை தயாரித்து, அதை திரைக்கு கொண்டு வருவதற்குள் தயாரிப்பாளர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு இதில் துளியும் அக்கறையில்லை.
கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை 21 படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்த படங்களின் மூலம் தமிழ் பட உலகுக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை தயாரிப்பாளர்கள்தான் தாங்குகிறார்கள்.
ஒவ்வொரு படமும் வெளியாகும்போது, நடைபெறும் பஞ்சாயத்துக்கள் மூலம் தயாரிப்பாளர்கள் படும்பாடு எங்களுக்கு தெரய வருகிறது. வெற்றியை பங்கு போடத் துடிக்கும் நடிகர் நடிகைகள் தோல்வியையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்,' என்றார் பாண்டியன்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், கவிஞர் பிறைசூடன் ஆகியோரும் பேசினார்கள்.
பட அதிபரும், டைரக்டருமான தம்பிதுரை வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளை பட அதிபரும் பிஆர்ஓ சங்கத் தலைவருமான விஜயமுரளி தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications











