பெங்களூர், ஹைதராபாத்திலும் ஹ்ரித்திக் படத்தை நிறுத்த நடவடிக்கை!

இப்போது பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இந்தப் படத்தை திரையிடாமல் நிறுத்த தென்னிந்திய பிலிம்சேம்பர் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாநில திரையரங்க சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தென் இந்திய திரையுலகம் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தது. தென் இந்தியாவை சேர்ந்த எந்த நடிகர், நடிகையும், திரையுலக பிரமுகர்களும் இலங்கை படவிழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தென் இந்திய திரையுலகம் தடை விதித்தது.
ஹிரித்திக் ரோஷன் உள்பட சில இந்தி நடிகர்கள் மட்டும் இலங்கை படவிழாவில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு தென் இந்திய திரையுலகம் தடை விதித்திருக்கிறது.
ஹிரித்திக் ரோஷன் நடித்த கைட்ஸ்' என்ற இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் சென்னையில் உள்ள ஈகா, சத்யம், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தது.
ஹிருத்திக்ரோஷன், தென் இந்திய திரையுலகம் விதித்த தடையை மீறி இலங்கை படவிழாவில் கலந்து கொண்டதால், கைட்ஸ் படத்தை திரையிடக்கூடாது என்று 'நாம் தமிழர் இயக்கம்' எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து 4 தியேட்டர்களில் இருந்தும் அந்த படத்தை தூக்கிவிட்டார்கள்.
தென்னகமெங்கும் 5 மாநிலங்களில் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஹைதராபாத், பெங்களூர், மைசூர் நகரங்களிலும் இந்தப் படத்தை தூக்க வேண்டும் என நாம் தமிழர் அமைப்பு திரைப்பட கூட்டமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பில் 5 மாநில திரைப்பட சங்கங்களும் அங்கம் வகிக்கின்றன. எனவே ஹ்ரித்திக் படத்தை உடனடியாக அனைத்து திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கேரளாவில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் ஏற்கெனவே கைட்ஸ் படத்துக்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதால் அங்கு இந்தப் படத்தை முன்பே தூக்கிவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











