twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளிக்கு 'மூணு'தான்... நஷ்டம் ரசிகர்களுக்கில்லை!

    |

    சினிமா என்பது விஞ்ஞானம் சார்ந்த ஒரு தொழில். அந்தத் தொழில் வளர வளர அதற்கான தடைக் கற்கள் விலக்கப்பட வேண்டும். முடிந்த வரை விஞ்ஞானத்தின் புதிய பரிமாணங்களையும் மக்களின் மனப்போக்கையும் அனுசரித்துப் போனால்தான் திரைத்துறையும் வளரும், திரைப்படங்களின் தரமும் வசூலும் உயரும்.

    ஆனல் கோடம்பாக்கத்தில் மட்டும்தான் தனித்தனி சங்கங்கள்/ யூனியன்கள்/ கவுன்சில்கள் வைத்து வளர்ச்சியைக் கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம்... இந்த சங்கங்களின் சுவர்களுக்கு அப்பால்தான் உண்மையான சினிமா உள்ளதென்ற விவரம் இவர்களுக்கு எப்போதுதான் தெரியப்போகிறதோ...

    சினிமா எடுப்பது ஏதோ அவரவர் வீட்டுக் கல்யாணம் போல என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல தயாரிப்பாளர்களும். அப்படியெனில் திருமண வீடியோ மாதிரி இவர்களே எடுத்து வீட்டுக்குள் கமுக்கமாக போட்டுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். மக்களின் பாக்கெட்டில் கையைவிட்டு காசு எடுக்காத குறையாக எக்கச்சக்க விளம்பரம் செய்து படத்தை ரிலீஸ் செய்யும் இவர்கள் அதுகுறித்த விமர்சனங்களை தாங்கித்தான் தீர வேண்டும்.

    முன்பெல்லாம் எக்கச்சக்க படங்கள் வெளியாகும், பண்டிகை தினங்களில்.

    அவற்றில் ஒன்றிரண்டு தோற்றாலும் மற்றவை முதலுக்கு மோசமில்லாமல் வசூல் இலக்கை எட்டிவிடும்.

    ஆனால் இன்று மாற்று பொழுதுபோக்குகள் நிறைய வந்துவிட்டன. ஆனால் சினிமாவில் மட்டும் அதே மாவு திரும்பத் திரும்ப அரைக்கப்படுவதால், மக்களே தியேட்டர்களைப் புறக்கணித்து சின்னத்திரைக்கு முன்னால் சரண்டராகிவிட்டனர்.

    ஒரு பண்டிகை நாள் முழுவதும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை தனக்கு முன் கட்டிப் போட தொலைக்காட்சிகளால் முடிகிறபோது, அதன் மூல காரணியான சினிமா மட்டும் தொடர் தோல்விகளைத் தழுவக் காரணம் சங்கங்கள் கண்டுபிடித்துள்ள சப்பைக் காரணங்கள் அல்ல... படைப்புத் திறன் இல்லாமை... அல்லது அது குறித்த முனைப்பு மழுங்கிப் போயிருப்பதுதான்.

    தீபாவளிக்கு ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி...

    இந்த தீபாவளிக்கு ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி என வெறும் மூன்றே மூன்று படங்கள் மட்டும் வெளியாகின்றன. காரணம், பெரிய படங்கள் பண்டிகை நாளைத் தவிர வேறு தினங்களில் வெளியாகக் கூடாது என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு.

    குறைவான படங்கள் வெளியானால் ரசிகர்கள் காய்ந்து போய் அப்படியே விழுந்தடித்துக் கொண்டு பணத்தைக் கொட்டுவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

    ஒத்தைப் படம் ரிலீசானாலும், சரக்கு இல்லையென்றால் சந்தடியில்லாமல் பெட்டியைக் கட்ட வேண்டியதுதான்... காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் என்ன அத்தனை கேனையனா!.

    கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்வதால் ரசிகர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை... அது படைப்பாளிகளையும் கலைஞர்களையும்தான் முடக்கிப் போடும். நத்தைபோல தங்களைத் தாங்களே கூட்டுக்குள் முடக்கிக் கொள்ள சினிமாக்காரர்கள் எடுக்கும் முயற்சியால் ரசிகர்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது!.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X