30 கிராமங்களைத் தத்தெடுத்த 'கந்தசாமி'!

கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கந்தசாமி படத்தின் அசத்தல் முன்னோட்டப் படங்கள் சமீபத்தில வெளியாகின.
இதற்கென நடைபெற்ற விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் சுசி கணேசன், விரைவில் புதிய கிராமத் தத்தெடுப்பு திட்டம் ஒன்றை அறிவிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
கந்தசாமி படம் ஆரம்பிக்கும் போதே, இரு கிராமங்களைத் தத்தெடுத்து, அந்த கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தந்ததனர் கந்தசாமி படத் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் சுசி கணேசனும்.
இதன் தாக்கத்தில் விழாவுக்கு வந்த விருந்தினர்கள் சிலரும் சில கிராமங்களைத் தத்தெடுப்பதாக அறிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிகள் நடந்து முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது, 30 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது கந்தசாமி படக்குழு. இந்தக் கிராமங்களில் இதுவரை செய்யப்பட்ட சாதனைகள் குறித்து இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
அதே நாளில் புதிய கிராமங்கள் பலவற்றைத் தத்தெடுக்கும் விதத்தில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











