ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

ஆந்திராவே பார்த்திராத வகையில் இந்த திருமணத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ 22 கோடியைச் செலவழித்துள்ளனர்.
ஜூனியர் என்.டி.ஆர்- லட்சுமி பிரணதி திருமணம் இன்று தொடங்குகிறது. நாளை அதிகாலை 2.41 மணிக்கு ஜூனியர் என்டிஆர் மணமகளுக்கு தாலி கட்டுகிறார். கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் அமர்க்களமாக நடந்து வந்தன.
ஹைதராபாத் அருகே உள்ள மாதாபூரில் திருமணப் பந்தல் போடப்பட்டு உள்ளது. ரூ.5 கோடி செலவில் பிரத்யேகமாக திருமண மண்டபமும் கட்டப்பட்டு உள்ளது. பந்தலை சுற்றிலும் அலங்கார வேலைப்பாடுகளுடன் சிலைகள், நீர்வீழ்ச்சிகள், அரண்மனை வாயில்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள், அரசியல், திரையுலக பிரமுகர்கள் 17 ஆயிரம் பேர் திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமையல் கலை நிபுணர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 55 உணவு வகைகளுடன் விருந்து பரிமாறப்படுகிறது. பஃபே முறையில் இல்லாமல் பந்தி போட்டு உணவு பரிமாறப்படுகிறது.
இன்று இரவு 7 மணி முதல் திருமண நிகழச்சிகள் துவங்குகின்றன. விடிய விடிய விருந்து நடைபெற உள்ளது. தெலுங்கு சம்பிரதாய சடங்குகளுடன் திருமணம் விமரிசையாக நடக்கிறது.
திருமண ஏற்பாடுகளை கடந்த ஒரு வாரமாக தாமே நேரடியாக மேற்பார்வையிட்டு செய்து முடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். திருமணத்துக்காக ஒரு மாதம் படப் பிடிப்புக்களைக் கூட அவர் ரத்து செய்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











