twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கமே, நியாயமா?

    |

    Bhuvaneswari
    விபச்சார வழக்கில் கைதாகியுள்ள புவனேஸ்வரி விவகாரத்தில் முதல்வரின் உதவியை நாடியுள்ளது திரையுலகம். தமிழக முதல்வர் பதவியை இதைவிட கேவலமாக்க முடியுமா என்று தெரியவில்லை.

    திரையுலகினர் குறித்து, குறிப்பாக நடிகைகள் குறித்து பொதுவாகவே ஒரு மாதிரியான அபிப்ராயம்தான் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்ற ஒரு சில நடிகர் நடிகையர் உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமே இதில் விதிவிலக்கு.

    குறிப்பாக நடிகைகளை மக்கள் எந்த நிலையில் பார்க்கிறார்கள் என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம். மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் அவர்களில் சிலர் சீசனுக்கு சீஸன் விபச்சார வழக்குகளில் சிக்கி தங்கள் இமேஜைக் 'காப்பாற்றிக் கொண்டு' வருகிறார்கள்.

    கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத விபச்சாரத் தொழில் நடக்கும் இடமாக திரையுலம் இன்று மாறி விட்டது. மாற்றியிருப்பவர்கள் யார்? சில நடிகர்களும், பெரும்பாலான நடிகைகளும், அவர்களுக்கு எடுப்பாக செயல்படும் சில 'மாமா'க்களும் தான்.

    இருந்தாலும் திரையுலகினரை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நல்ல மரியாதை கொடுத்துத்தான் வைத்துள்ளனர். அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுகிறார்கள்.

    அனைவராலும் நினைத்த நேரத்தில் போய் பார்த்து விட முடியாத முதல்வரைக் கூட, நினைத்த நேரத்தில் பார்க்கும் அளவு மகா செல்வாக்கான இடத்தில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு பத்திரிகையாளரால் கூட சந்திக்க முடியாத முதல்வரை, ஒரு நடிகை நினைத்தால் வீட்டுக்குப் போய் சந்தித்து போட்டோ எடுத்து பப்ளிசிட்டி தேடும் அளவுக்குதான் இன்று நிலைமை உள்ளது.

    அப்போது யார் ஆட்சி பீடத்தில் இருக்கிறார்களோ அவர்களுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களை கைது செய்யச் சென்றால் போட்டோவைக் காட்டி இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என சம்பந்தப்பட்ட நடிகைகள் போலீஸ் அதிகாரிகளையே மிரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புவனேஸ்வரியைக் கைது செய்ய சென்றபோது கூட முக்கியத் தலைவர் மற்றும் அவரது மகனுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவைக் காட்டி இப்படித்தான் மிரட்டினார் புவனேஸ்வரி.

    அந்த உரிமையில் சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்துவிட்டு பெரும்பாலும் ஆட்சியாளர்களின் பெயர்களைக் கூறி (அவர்களுக்கேத் தெரியாமல்) தப்பிக்கவும், தொடர்ந்து தவறுகள் செய்யவும் முனைகிறார்கள். ஒருவேளை அதையும் மீறி மாட்டிக் கொள்ளும்போது, பகிரங்கமாக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கிறார்கள்.

    இன்று கூட நடிகர் சங்கம் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. புவனேஸ்வரி விவகாரம் தொடர்பாக தவறான செய்திகள் வெளியாகின்றன. அடக்கி வையுங்கள் என்று அது கூறுகிறது. போலீஸாரை அடக்கச் சொல்கிறார்களா அல்லது புவனேஸ்வரி தொடர்பான விவகாரத்தையே அடக்கச் சொல்கிறார்களா அல்லது அவர் கொடுத்த லிஸ்ட்டில் உள்ள நடிகைககள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமுக்கி விடச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

    காவல்துறை பொறுப்பு முதல்வர் வசம் உள்ளது. ஆனால் அவரிடமே போலீசாரையும் மீடியாவையும் அடக்கச் சொல்லி மனு தருகிறார் நடிகர் சங்கப் பொறுப்பாளர் ராதாரவி. தெரிந்தே போலீசாரை மிரட்ட இந்த டெக்னிக்கைப் பயன்படுத்துகிறாரா என்று தெரியவில்லை.

    மீடியாவை அடக்குங்கள் என்று கோருவதே, எழுத்துச் சுதந்திரத்தை நசுக்கும் அப்பட்டமான முயற்சிதான். யாருமே தேவையில்லாமல், வேண்டும் என்றே செய்திகள் போடுவதில்லை. கிடைத்த தகவல்களை வெளியிடுவது மீடியாக்களின் கடமை. புவனேஸ்வரியே தனது வாயால் போலீஸாரிடம் கொடுத்த பட்டியலைத்தான், அதுவும், போலீஸ் மூலமே கிடைத்த பட்டியலைத்தான் இன்று ஒவ்வொரு பத்திரிக்கையும், இன்டர்நெட்டும் ஒவ்வொரு பாணியில் போட்டு வருகின்றன.

    போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதே செய்திகளாகின்றன.

    மாட்டிக் கொள்பவர் பெரிய பட்டியலே கொடுக்கும்போது அதை அப்படியே மூடி மறைக்கச் சொல்கிறார்களா?
    அப்படியே இந்தத் தகவல்களை ரகசியமாக மறைக்க, பாதுகாக்க இது என்ன ராணுவ ரகசியமா? சமூகத்துக்கும் தெரியட்டுமே... அப்போதுதானே நாளை இவர்களில் யாராவது, எம்.பி., எம்.எல்.ஏ என்று தேர்தல் களத்தில் குதிக்கும்போது மக்கள் கொஞ்சம் உஷாராக முடியும்.

    பிக்பாக்கெட், கஞ்சா கேஸ், கள்ளச்சாராயம், திருட்டு என பல குற்றங்களைச் செய்பவர்களை ஜட்டியுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து மீடியாக்களுக்குக் கொடுப்பார்கள். அதேசமயம், விபச்சார வழக்குகளில் பிடிபடும் பெண்கள் விஷயத்தில் போலீஸார் இதுபோல நடப்பதில்லை. மாறாக, மனிதாபிமானத்துடன்தான் நடப்பது வழக்கம்.

    விபச்சாரத்தில் ஈடுபட்ட துணை நடிகை கைது என்றெல்லாம் கிட்டத்தட்ட தினசரி செய்திகள் வருகின்றன. அப்போதெல்லாம் கொந்தளிக்காத நடிகர் சங்கம் இன்று பெரிய நடிகைகள் குறித்து தகவல்கள் வெளியானவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வருவது அவர்களுக்கே பாரபட்சமாக தெரியவில்லையா..

    இப்படியெல்லாம் கொந்தளிப்பதற்குப் பதிலாக, நன்கு சம்பாதித்து, சமூகத்தில் நல்ல மதிப்புடன் போற்றப்படும் (இவர்களுக்கு கோவில்களை வேறு கட்டுகிறார்கள் நமது பாழாய்ப் போன மக்கள்) நடிகர், நடிகைகள் தவறான வழியில் போகாமல் இருக்க, விபச்சாரம் போன்ற அசிங்கத்தில் கால் வைக்காமல் இருக்க நடிகர் சங்கம் இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்ற பதில்தான் வரும்.

    அதற்குப் பதில், அவர்களை நல்வழியில் திருப்ப நடிகர் சங்கம் ஏன் முயற்சிக்கக் கூடாது, கவுன்சிலிங் போன்றவற்றை ஏன் தரக் கூடாது.

    தங்களது ஆடம்பர வாழ்க்கை, கை நிறைய பணம் புழங்கி பழகி விட்டு அவற்றை தொடர முடியாமல் தவிப்பது உள்ளிட்ட காரணங்களால், மார்க்கெட்டு போன நிலையில் நடிகைகளில் சிலர் வேறு பாதையில் போகிறார்கள்.

    ஒரு ஒழுங்கற்ற, முறைப்படுத்தப்படாத தொழிலாக திரைத்துறை இருப்பதே இதற்குக் காரணம். இதை சரி செய்ய நடிகர் சங்கம் முதலில் முன்வர வேண்டும். நம் மீது அவதூறு வீசுகிறார்களே என்று வருந்தாமல், அதை சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு பேனா கூட இனிமேல் நம்மைப் பற்றி தவறாக எழுத முடியாத அளவுக்கு நடிகர், நடிகையருக்குள் ஒழுங்கைக் கொண்டு உழைக்க வேண்டும்.

    மற்ற தொழில்களில் எப்படி ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறதோ அப்படித்தான் திரைத் துறையும் செயல்பட வேண்டும். ஒரு அலுவலகத்தில் பெண் ஊழியர் தவறு செய்தால் உடனே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது திருந்த வாய்ப்பளிப்பார்கள். எதுவும் சரி வராவிட்டால் டிஸ்மிஸ் செய்வார்கள். குறைந்தபட்சம் புவனேஸ்வரியை உறுப்பினர் பதவியிலிருந்தாவது நீக்குகிறதா நடிகர் சங்கம் என்று தெரியவில்லை.

    திரைத் துறையினரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஒழுங்குக்கும், கட்டுப்பட்டவர்கள்தான்.
    சட்டத்துக்கும் ஆட்சியமைப்புக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

    அஞ்சுக்கும் பத்துக்கும் விபச்சாரம் செய்து மாட்டிக் கொள்ளும் சாதாரணப் பெண்கள், முதல்வரை அவ்வளவு எளிதில் அணுகி கோரிக்கை விடுத்து விட முடியுமா? ஆனால் நம் மீது எந்த அளவுக்கு முதல்வர் நம்பிக்கையும், மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார் என்று நடிகர் சங்கம் நினைத்திருந்தால் இன்று புவனேஸ்வரி மேட்டரில் தலையிடுங்கள், அதுதொடர்பான செய்திகளுக்கு கடிவாளம் போடுங்கள் என்று இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்க மாட்டார்கள்.

    எந்தத் துறைக்கும் கிடைக்காத சலுகைகள், வரிவிலக்குகள், மானியங்கள், ஊக்கத் தொகைகள் திரைத்துறைக்கு மட்டும் தரப்படுகின்றன, ஒரு மக்கள் அரசாங்கத்தால். ஒரு முறைப்படுத்தப்படாத துறைக்கு (சினிமா ஒரு தொழிலாகக் கூட இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை) இத்தனைச் சலுகைகளை முதல்வர் தருகிறார்.

    இத்தனை சலுகைகளைத் தரும் மக்களுக்கு இந்த திரைத்துறை திருப்பிச் செய்வது என்ன தெரியுமா... ஒழுக்கக் கேடுகள், ஆபாசத்தைக் கற்றுத் தருவதுதான்.

    வறுமையாலும், வாழ வழியில்லாததாலும், விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு சாதாரணப் பெண்ணுக்கு கருணை காட்டாத சட்டம், அதையே சொகுசுத் தொழிலாகச் செய்யும் திரைத்துறையினர் சிலருக்கு மட்டும் காட்ட வேண்டும் என எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நியாயமல்ல.

    நடிகர் சங்கம் ஆவேசப்படாமல், அமைதியாக யோசித்து, தன் மீதான களங்கத்தைத் துடைக்கும் வழிகளை யோசித்தால் அது மக்களுக்கு அல்ல, திரைத்துறைக்கு நிச்சயம் நல்லதுக்கு அடிகோலும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X