சாமிக்குத் தடை நீங்கியது!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சாமிக்குத் தடை விதிக்கப்பட்டது. மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்து விட்டார் என்ற சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து சாமி, பத்மப்ரியாவை அழைத்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின்னர் சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து அமைப்புகளும் அறிவித்தன.
இதனால் மிருகம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை சாமி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ராஜ்கிரணை நாயகனாக வைத்து புதிய படம் இயக்கும் வாய்ப்பு சாமிக்கு வந்தது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிய சாமி, தடை உத்தரவை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தார்.
சரியான சமயத்தில் இந்தத் தடை நீக்கப்படாவிட்டால், நல்ல சினிமாவைத் தர முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். இதைப் பரிசீலித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், அவசரக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்தார்.
அதில் பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாமிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 30ம் தேதியன்றே தடை முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது முன்தேதியிட்டு தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால் சாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். இனிமேல், திரைப்படங்கள் மூலம் எனது திறமைகளைக் காட்டப் போகிறேன். நான் பேச மாட்டேன், இனிமேல் எனது படங்கள்தான் பேசும் என்றார்.
ராஜ்கிரணை வைத்து சாமி இயக்கப் போகும் படத்துக்கு சரித்திரம் என பெயரிட்டுள்ளாராம்.
சாமி, சரித்திரம் படைக்கட்டும்.


Click it and Unblock the Notifications











