ஷாருக்குக்கு ஆதரவாக திரளும் பாலிவுட்- சிவசேனாவை குரங்குப் படை என்று கூறும் கஜோல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும் சேர்த்திருக்க வேண்டும் என்று கூறியதற்காக ஷாருக் கானை விளாசி வருகிறது சிவசேனா. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தை ஓட விட மாட்டோம் என கூறி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஷாருக் கான் மட்டும் தனித்துப் போராடி வந்தார். அவருக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் யாரும் குரல் கொடுக்காமல் இருந்து வந்தனர். சிவசேனாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற தயக்கமே இதற்குக் காரணம்.
ஆனால் தற்போது படிப்படியாக ஒவ்வொருவராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். முதலில் அபிஷேக் பச்சன் இந்த விவகாரத்தைக் கண்டித்தார். தற்போது மண்ணின் மைந்தரான நானா படேகர், ஷாருக்குக்கு எதிர்ப்பாகவே இருக்கும் சல்மான் கான், கஜோல் உள்ளிட்டோரும் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதிலும் கஜோல் சிவசேனாவினரை குரங்குகள் என்று கூறியுள்ளார். தனது ட்வீட்டர் செய்தியில் அவர் கூறுகையில்,
சிவசேனா கட்சி நமது நாட்டின் ஜோக்கர் கட்சியாக மாறி விட்டது. அவர்கள் எப்போதும் வெறுப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
சிவசேனாவை குரங்குகளின் படை என்று தான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு படையால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.
இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும் என்று கடுமையாக சாடியுள்ளார்.
சல்மான்கான் கூறுகையில், அரசியலையும், கிரிக்கெட் விளையாட்டையும் கலக்கக்கூடாது. திரைப்படம் என்பது ஒவ்வொருவருக்கும் உரியது.
நாங்கள் தெருவில் இறங்கி எந்த கட்சிக்கும் ஓட்டுப் போடுங்கள், ஓட்டுப் போடாதீர்கள் என்று சொல்வது இல்லை. அதை சிவசேனா தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











