திரிஷா வழியில் பிரியா!

மாடல் அழகியாக அறிமுகமாகி அப்படியே சினிமாவுக்கு ஜம்ப் பண்ணி தமிழ், தெலுங்கு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் திரிஷா. தென்னிந்திய கனவு தேவதையாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்த திரிஷா வரிசையில் இப்போது இன்னொரு சென்னை மாடல் சினிமா நடிகையாகியுள்ளார்.
முன்னணி மாடல் அழகியான பிரியா ஆனந்த், வாமனன் படம் மூலம் நாயகியாக அரங்கேற்றம் காண்கிறார். சுப்ரமணியபுரம் நாயகன் ஜெய் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரியா ஆனந்துக்கு இணையான கேரக்டரில் பெல்காம் அழகி லட்சுமி ராய் கலக்கவுள்ளார்.
சந்தானம், சம்பத், ஊர்வசியும் படத்தில் உள்ளனர்.
இப்படத்தை ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்து வரும் ஆர்.ரவிச்சந்திரனின் பிலிம் வேலி கார்ப்பரேஷன் தயாரிக்கவுள்ளது.
இயக்குநர் கதிரின் உதவியாளரான அகமது இப்படம் மூலம் இயக்குநராகிறார். கதை, திரைக்கதை, வசனத்தையும் இவரே பார்த்துக் கொள்கிறார்.
படத்தின் கதை சிம்பிளானது. சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவுடன் கிராமத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வருகிறார் ஹீரோ. அதை அடைவதற்குள் என்னென்ன சிக்கல்கள், சீரழிவுகளை சந்தித்து வெற்றி கொள்கிறார் என்பதே படத்தின் கதையாம்.
அரவிந்த் கிருஷ்ணா கேமராமேன். யுவன் ஷங்கர் ராஜா இசை.
சென்னையில் இம்மாதக் கடைசியில் படப்பிடிப்பு தொடங்கி அப்படியே கோவை, சாலக்குடி என இடம் பெயருகிறது.
இதுதவிர பாடல் காட்சிகளையும், சில முக்கிய காட்சிகளையும் சிங்கப்பூர், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் வைத்து சுடவுள்ளனராம்.
வாமனன் - விஸ்வரூபம் எடுக்கட்டும்.


Click it and Unblock the Notifications











