சசிகுமாரின் 'போராளி'... ஒரு அறிமுகம்!
'ஈசனு'க்குப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த இயக்குநர் - தயாரிப்பாளர் - வெற்றிகரமான ஹீரோ சசிகுமார், மீண்டும் தலை சிலுப்பிக் கிளம்பியிருக்கிறார் 'போராளி'யாக!
'உன் படத்தில் நான் ஹீரோ, என் படத்தில் நீ ஹீரோ' என்ற 'சசி - சமுத்திரக்கனி ஒப்பந்தப்படி' சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் வரிசையில் இந்த முறை சமுத்திரக் கனி இயக்க, சசிகுமார் நாயகனாக நடிக்கிறார் போராளி படத்தில்.
சசிகுமாரின் கம்பெனி புரொடக்டக்ஷன்தான் படத்தை தயாரிக்கிறது.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பிஆர்ஓ நிகில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
சசிகுமார் பேசுகையில், "அது என்ன போராளி என்ற கேள்வியோடு பலர் வந்திருப்பீர்கள். இது தீவிரவாதம் பற்றியதல்ல. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எவ்வளவோ போராட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
வீட்டை விட்டு வெளியில் வந்து மீண்டும் வீட்டுக்குள் போவதற்குள் ஆயிரம் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி போராடும் 4 பேரின் கதைதான் 'போராளி.' நான் (சசிகுமார்), அல்லரி நரேஷ், ஸ்வாதி, நிவேதா ஆகிய 4 பேரும்தான் அந்த போராளிகள்.
2 ஆண்டுகளாக வளர்த்த முடி
'போராளி' படத்துக்காக, கடந்த 2 வருடங்களாக நான் தலைமுடியை வளர்த்தேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட தலைமுடி வளர்த்தேன். இப்போது நீங்கள் பார்ப்பது வேறு. படத்தில் இந்த ஜடா முடியுடன் எனக்கு இன்னொரு தோற்றமும் இருக்கிறது,'' என்றார்.


Click it and Unblock the Notifications











