இனி செல்வராகவனுடன் சேரமாட்டேன்!-யுவன்

செல்வராகவனுடன் இனி சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பே இல்லை. இருவரும் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டோம் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவனின் முதல் படமான துள்ளுவதோ இளமை தொடங்கி, கடைசியாக வெளிவந்த யாரடி நீ மோகினி வரை இணைந்து பணியாற்றியவர் யுவன் சங்கர் ராஜா. காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களில் யுவன் இசை பெரிதும் பேசப்பட்டது.
இருவரும் இணைந்து புதிய படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கும் அளவு நெருக்கமாக இருந்தனர்.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் போதுதான் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதியிலேயே விலகிக் கொண்டார் யுவன். இரு பாடல்கள் மட்டும் அவர் இசையமைத்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் அவருக்கு பதில் இசையமைத்து வருகிறார்.
இப்போது தங்கள் பிரிவுக்கான காரணம் குறித்து யுவன் சங்கர் ராஜா வெளிப்படையாக பேசியுள்ளார். ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும் செல்வராகவனுக்கும் ஏற்பட்டுள்ள பிரிவு நிரந்தரமானது.
இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை. காரணம் நல்ல நண்பனாக இருக்கும் தகுதி செல்வராகவனுக்கு இல்லை. இக்கட்டான தருணத்தில் உதவும் நண்பராக அவர் நடந்து கொள்ளவில்லை, என்று கூறியுள்ளார்.
சமீபத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தனக்கும் இயக்குநர் கவுதம் மேனனுக்கும் இடையே நிரந்தரப் பிரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











