'சிவாஜிக்கு செய்த துரோகம்...' -கமல் ஆதங்கம்

சத்யம் சினிமாஸ், ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி இணாந்து தயாரிக்கும் திரு திரு துறு துறு படத்தின் ஆடியோவை கலைஞானி கமல்ஹாஸன் வெளியிட்டு வாழ்த்தினார்.
சத்யம் திரையரங்க வளாகத்தில் நடந்த இந்த விழாவில் முதல் ஆடியோ சிடியை கமல் வெளியிட இயக்குநர்கள் முருகதாஸ், கேஎஸ் ரவிக்குமார், கவுதம் வாசுதேவ மேனன், நடிகை சினேகா, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
வித்தியாசமாக இருக்கட்டுமே என்று, விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு விஐபியும் திரு திருவென விழித்த அனுபவங்களை பகிரந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
தம்மடித்து மாட்டிக் கொண்ட ரஜினி-ரவிக்குமார்:
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், தனது 'திரு திரு துறு துறு'வென அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்:
"இந்தப் படத்தின் தலைப்பு எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் திரு திரு... துறு துறு அனுபவங்கள் நிறையவே இருக்கும். குறிப்பாக முதலிரவில் திரு திருவென முழித்து, பின் துறுதுறுவென செயல்பட்டவர்கள்தான் இங்குள்ளவர்கள் பலரும்.
என்னுடைய 'திரு திரு' அனுபவம், படையப்பா படப்பிடிப்பில்தான் நேர்ந்தது. அந்தப் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்து, பின்னர் புகை என்றாலே ஒத்துக் கொள்ளாத அளவுக்கு மாறிப் போனவர். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், காலை முதல் மாலை வரை செட்டிலேயே இருப்பார். எனக்கோ தம்மடிக்காமல் இருக்க முடியாது. படப்பிடிப்பு அரங்குக்கு உள்ளே பழைய பொருட்கள் வைக்கும் அறைக்குள் போய் ரகசியமாக தம்மடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே எனக்கு முன்பே ஒருவர் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவர் ரஜினி சார்...
முடித்துவிட்டு இருவரும் வெளியில் வந்தோம். அந்த சிகரெட் வாசனையும் கூடவே வந்துவிட்டது. உடனே சிவாஜி சார், எவண்டா அவன் செட்டுக்குள்ள சிகரெட் புடிக்கிறது... என்று கர்ஜிக்க, எங்கள் இருவருக்குமே என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தது மறக்க முடியாதது. உடனே, பக்கத்திலிருந்த மேக்கப்மேனை மாட்டிவிட்டோம்... வேறு வழியில்லை. இத்தனைக்கும் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமே இல்லை..." என்றார்.
கமலிடம் 'விழித்த' கவுதம்...
கவுதம் மேனன் பேசுகையில், "ரவிக்குமாருக்கு சிவாஜி சார் என்றால், நான் கமல் சாரிடம் மாட்டிக்கொண்டு திருதிருவென விழித்திருக்கிறேன். கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை இயக்குவதே பெரிய விஷயம். வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பின் இரண்டாம் நாளில் ஒரு காட்சி. தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஜோதிகாவை காப்பாற்றும் கமல் அவரிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்ற அர்த்தத்தில் ஏன் என்று ஒரு வசனம் பேசவேண்டும்.
அவரும் பேசிவிட்டார். ஆனால் எனக்கு அது இன்னும் பெட்டராக வரவேண்டும் என விரும்பினேன். அதை அவரிடம் தயங்கித் தயங்கி கேட்டேன். உடனே, நான் பேசினது சரியில்லையா என்றார். நான், இல்லை... நீங்க கொஞ்சம் அதட்டின மாதிரி பேசிட்டீங்க. இன்னும் கொஞ்சம் தன்மையா பேசணும் என்றேன். உடனே எங்க கொஞ்சம் நடிச்சிக் காட்டுங்க என அவர் சொல்ல, நான் நிஜமாகவே திருதிருவென முழித்தேன். ஆனால் பிறகு நிலைமையைப் புரிந்து அவரே மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்" என்றார்.
ஆடியோவை வெளியிட்ட பின் கமல்ஹாசன் பேசியதாவது:
"வணக்கம்... நான் வணக்கம் சொன்ன உடனே இங்கு பெரும் ஆரவாரம் எழுந்தது. அது பணிவுக்குக் கிடைத்த மரியாதை. பணிவுக்கும் துணிவுக்கும்தான் இந்த மரியாதை கிடைக்கும்.
இந்த விழா சினிமாவுக்கு மிக முக்கியமானது. டிஜிட்டல் சினிமாவை வரவேற்பது நம் கடமை ஆகிறது. இதை சொல்வதால், நான் பழமையை போகி பண்டிகையாக கொண்டாடுபவன் என்று நினைக்க வேண்டாம். சத்யம் சினிமா- ரியல் இமேஜ் என்ற நல்ல கூட்டணி பெற்றெடுக்கும் இந்தக் குழந்தையும் நிச்சயம் நல்ல ஆரோக்கியமாகவே இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்தப் படத்தின் டிசைன்கள் மற்றும் பாடல்கள் வித்தியாசமாக உள்ளன.
இதுதான் எதிர்கால சினிமா. நிச்சயம் இதனை வாழ்த்த வேண்டும். பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.
ரவிக்குமார் நடிகர் திலகம் சிவாஜியிடம் பட்ட அனுபவத்தைச் சொன்னார்... கவுதம் வாசுதேவ மேனன் என்னைக் குறிப்பிட்டார். கவுதம் மேனன் விஷயத்தில் நான் வேண்டுமென்றே அப்படி நடந்துகொள்ளவில்லை. உண்மையில் இயக்குநர்கள் எப்படி நடிக்கச் சொல்கிறார்களோ அப்படிச் செய்பவர்கள்தான் நடிகர்கள். எனது இயக்குநர்களில் பெரும்பாலானோர் அப்படி நடித்துக் காட்டி, என்னிடம் வேலை வாங்கியவர்கள்தான்.
அதனால்தான் கவுதம் மேனனை அப்படி நடித்துக் காட்டச் சொன்னேனே தவிர, ஆணவத்தால் அல்ல.
நடிக்காமலே நடிப்பு சொல்லித்தரும் வித்தகர்களை எனக்கு தெரியும். அதில் ஒருவர், பாலுமகேந்திரா. அவர் சொல்லித்தருவது போல் நான் அவருக்கு நடித்துக் காட்டுவேன். நான், டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். நடிப்பு சுலபமான விஷயம்தான்.
ரவிக்குமாருக்கும் கவுதம் மேனனுக்கும் நடந்ததைப் போல எனக்கும் ஒரு அனுபவம் நேர்ந்தது. ஆனால் நான் திருதிருவென விழிக்கவில்லை. தேவர் மகன் படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியில் சிவாஜி நடித்துவிட்டார். ஆனால் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை. இயக்குநரிடம் போய், இன்னொரு தடவை அந்தக் காட்சியை எடுக்கலாம். அவர் இன்னும் நல்லா பண்ணித் தருவார், என்றேன். அதை சிவாஜி கவனித்துவிட்டார். அவருக்கு ஏழெட்டுக் கண்கள். எல்லா பக்கமும் கவனிப்பார்.
என்னை அழைத்தார். 'என்ன வேணும் முதலாளி...?' என்றார் சிரித்தபடி.
நான் உடனே 'இல்ல... படத்தில், நீங்க பெரிய தேவர். இது, கொஞ்சம் சின்ன தேவர் மாதிரி இருக்கிறது' என்று சொன்னேன். அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டபோது, சிவாஜியின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்தது. அதுதான், படத்தில் நான் மழையில் வழுக்கும்போது சிவாஜி பதறும் காட்சி.
சிவாஜி எப்படி நடிப்பார்? என்பது ஒரு ரசிகர் என்ற முறையில் எனக்கு தெரியும். 'வியட்நாம் வீடு,' 'எங்க ஊர் ராஜா' படங்களை எல்லாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?.
20ம் நூற்றாண்டு நடிப்பை சிவாஜியால் காட்ட முடியும். அந்த 20ம் நூற்றாண்டு நடிகரை 19ம் நூற்றாண்டில் வைத்திருந்தது நாம் செய்த தவறு. அந்த துரோகம் எனக்கும் நடந்துவிடக்கூடாது. டைரக்டர்கள் நடிப்பை சொல்லித் தர வேண்டும். என் எதிர்காலம் டைரக்டர்கள் கையில்தான் இருக்கிறது.
இந்த திருதி்ரு துறுதுறு படம் முழுக்க முழுக்க டிஜிட்டலில் தயாராகியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுதான் எதிர்கால சினிமா. இதை பல ஆண்டுகளாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
சேட்டிலைட் சேனல்களே கூடாது என கொடி பிடித்த கூட்டம் ஒன்று இங்கு உண்டு. அன்றைக்கு அதில் சேராமல் தனித்து நின்று குரல் கொடுத்தவன் நான் ஒருவன் மட்டும்தான்.
நாம் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நவீன கண்டுபிடிப்புகள் வந்துகொண்டேதான் இருக்கும். அந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. நல்லவேளை... இவற்றை ஏற்றுக் கொள்பவர்களாகப் பார்த்துதான் இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இன்னும் புரியும்படி சொல்வோம்.
டிஜிட்டல் சினிமா வந்தே தீரும். அப்படி வந்தால், 'லேப் லெட்டர்' கொடுப்பது எப்படி? என்று கேட்கலாம். மாட்டுவண்டி காலத்தில் டோல்கேட் இருந்தது. விமானம் வந்த பிறகு ஏர்போர்ட் கட்டவில்லையா? அதுமாதிரிதான்..." என்றார்.
ஒவ்வொரு பெண்ணாலும் சாதிக்க முடியும்!:
படத்தின் இயக்குநர் நந்தினி தனது நன்றி உரையில் கூறியதாவது:
"இன்று நான் ஒரு இயக்குநராக அடையாளம் தெரி்யக் காரணம் என் குடும்பம்தான். என் தாய், தந்தை, தம்பி மற்றும் என் கணவர் கொடுத்த உற்சாகமும் ஒத்துழைப்பும்தான் இந்த நிலைக்கு என்னை உயர வைத்துள்ளது. இதே மாதிரி எல்லா பெண்களுக்கும் குடும்பம் அமைந்தால் நிச்சயம் இன்னும் பல பெண்கள் இயக்குநர்களாக உருவாவார்கள். பல சாதனைகளைப் படைப்பார்கள்.
இந்தப் படம் பெரிய சோதனைகளுக்குப் பிறகுதான் எனக்குக் கிடைத்தது. நான் சொல்ல வேண்டிய கதையை காட்சிகளாக வீடியோவில் பதிவு செய்து, தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருந்தேன். அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகித்தான் கதை கேட்டார்கள். இந்த வாய்ப்பும் வந்தது.
பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நான் கமல் சார் கையால்தான் விருது வாங்கினேன். அது அவருக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. இன்று அதே கமல் சார்தான் என்னுடைய படத்தின் ஆடியோவை வெளியி்டுகிறார். இதைவிட பெரிய பெருமை எதுவுமில்லை.
திரைத்துறையில் என்னை மிகவும் உற்சாகப்டுத்தி அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வைத்தவர் பிரியா வி. அவரிடம்தான் கண்ட நாள் முதல் படத்தில் உதவியாளராகப் பணியாற்றினேன். அவருக்கு நன்றிகள் என்றார்.
சத்யம் சிஇஓ ஸ்வரூப் ரெட்டி வரவேற்றார். ரியல் இமேஜ் ஜெயேந்திரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











